ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் துப்பாக்கியால் சுடப்பட்டார்: கவலைக்கிடம்

ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் துப்பாக்கியால் சுடப்பட்டார்: கவலைக்கிடம்
X

காவலரால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் தாஸ்

ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றபோது உதவி காவல் ஆய்வாளரால் சுடப்பட்டார்

ஒடிசாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் அதிகாரியால் சுடப்பட்டார். மாவட்டத்தின் பிரஜ்ராஜ்நகர் நகரில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மார்பில் குண்டு காயம் அடைந்த நபா தாஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஜார்சுகுடா விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார், அங்கிருந்து நபா தாஸ் விமானம் மூலம் புவனேஸ்வருக்கு அழைத்துச் செல்லப்படுவார். மேல் சிகிச்சைக்காக நபா தாஸ் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்.

காந்தி சதுக்கத்தில் அமைச்சர் தனது காரில் இருந்து இறங்கும் போது உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் அமைச்சரை நோக்கி குறைந்தது நான்கைந்து தோட்டாக்களை சுட்டார். அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இன்றைய நிகழ்விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக கோபால் தாஸ் பணியமர்த்தப்பட்டிருந்தார் மற்றும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அமைச்சருக்கு அருகாமையில் இருந்தார்.துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது விசாரித்து வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகு கூடுதல் விவரங்கள் கிடைக்கும். துப்பாக்கிச்சூட்டுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறினர்

மெகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த நபா தாஸ் மீது காவல் அதிகாரியே சுட்டது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

"பொதுமக்கள் குறைகேட்பு அலுவலக திறப்பு விழாவில், நபா தாஸ் தலைமை விருந்தினராக இருந்தார். அவர் வந்தபோது, ​​அவரை வரவேற்க கூட்டம் கூடியது. திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடுவதைப் பார்த்தோம்." என்று நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறினார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பிஜேடி கட்சியினர் தர்ணா நடத்தியதால் அந்த இடத்தில் பதற்றம் நிலவியது. அமைச்சரை மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு 'முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக' சந்தேகிக்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!