2 தொகுதியி்ல் போட்டியிடும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
ஒடிசாவில் 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வராக உள்ள நவீன் பட்நாயக் வரும் சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 2000ம் ஆண்டு முதல் பிஜு ஜனதாதளம் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். இந்த மாநிலத்தில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சி 112 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். ஒடிசா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஒடிசாவில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்படி ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 18ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு செய்ய மார்ச் 25 கடைசி நாளாகும். மனு மீதான பரிசீலனை என்பது ஏப்ரல் 26ல் நடக்கும். மனு வாபஸ் பெற ஏப்ரல் 26ம் தேதி கடைசி நாளாகும்.
தேர்தல் என்பது மே 13-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. மே 13, மே 20, மே 26, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் பிஜு ஜனதாதளம் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான நவீன் பட்நாயக், சட்டசபை தேர்தலுக்கான 5வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார்.
இதில் முதல்வர் நவீன் பட்நாயக் 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதாவது நவீன் பட்நாயக் தனது சொந்த தொகுதியான கஞ்சம் மாவட்டம் ஹிஞ்சிலி மற்றும் போலாங்கிர் மாவட்டம் காந்த பாஞ்சி தொகுதிகளில் களமிறங்குகிறார். இதனால் அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் உண்மையில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிடுவது இது முதல் முறையல்ல. கடந்த 2019 சட்டசபை தேர்தலில் கூட ஹிஞ்சிலி, பிஜிபூர் தொகுதிகளில் அவர் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் பிஜிபூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது நவீன் பட்நாயக் தனது சொந்த தொகுதியான ஹிஞ்சிலிக்கு அடுத்ததாக காந்தபாஞ்சி தொகுதியை தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தியபோது காந்தபாஞ்சி என்பது ஒடிசாவின் மேற்கு மண்டல பகுதியில் உள்ளது. இங்கு தான் பாஜக சமீபகாலமாக எழுச்சி பெற்று வருகிறது. இதனால் பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி தொகுதியுடன் காந்தபாஞ்சியிலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu