டெல்லி இந்தியா கேட்டில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
மாபெரும் விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை நினைவுபடுத்தும் வகையிலும் ஓராண்டு கால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலை ஒன்றை இந்தியா நுழைவாயிலில் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பளிங்குக் கல்லால் உருவாக்கப்படவிருக்கும் இந்தச் சிலை நமது விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியின் தீவிரமான பங்களிப்புக்குப் பொருத்தமான அஞ்சலியாக இருப்பதோடு அவருக்கு நாடு கடன் பட்டிருப்பதன் அடையாளமாகவும் இருக்கும். இந்தச் சிலைக்கான பணி நிறைவுபெறும்வரை நேதாஜியின் முப்பரிமாண மெய்நிகர் சிலை ஒன்று அதே இடத்தில் அமைக்கப்படும்.
நேதாஜியின் முப்பரிமாண மெய்நிகர் சிலையை இந்திய நுழைவுவாயிலில் பிரதமர் நரேந்திர மோடி 2022, ஜனவரி 23 அன்று மாலை 6 மணிக்குத் திறந்துவைப்பார். இந்தச் சிலையின் உயரம் 28 அடி, அகலம் 6அடி.
இந்தச் சிலை நிறுவும் விழாவின் போது, 2019, 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளுக்கான சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுகளையும் பிரதமர் வழங்குவார். இந்த விழாவில் மொத்தம் ஏழு விருதுகள் வழங்கப்படும். சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுபெறும் அமைப்புக்கு ரூ.51 லட்சம் ரொக்கப் பரிசும் ஒரு சான்றிதழும் தனிநபருக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும் ஒரு சான்றிதழும் வழங்கப்படும். என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu