2-ம் கட்ட வாக்குப்பதிவின் போது இயல்பான வானிலை: இந்திய வானிலை ஆய்வு மையம்
பைல் படம்
மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவின் போது இயல்பான வானிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குப் பதிவின் போது பெரிய அளவில் வெப்ப அலை நிலவாது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வானிலை நிலவரம் இயல்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் பற்றிய அறிக்கைகளை கருத்தில் கொண்டு, வானிலை சூழலை அறிந்து கொள்வதற்கும், பொதுத் தேர்தல் காலத்தில் வெப்பமான வானிலை காரணமாக ஏற்படும் எந்தவொரு ஆபத்தையும் தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒரு கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று நடத்தியது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துறைத் தலைவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆகியோர் ஒவ்வொரு வாக்குப்பதிவு கட்டத்திற்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு, வெப்ப அலை மற்றும் ஈரப்பதத்தின் தாக்கத்தை தணிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும்.
தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் வெப்ப அலை சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு மாநிலங்களில் உள்ள சுகாதார துறையினருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும், விரிவான உதவியை அளிக்குமாறும் தேர்தல் ஆணையம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu