கும்கி யானைகள் மற்றும் பாகன்களை அனுப்ப தமிழகத்தை கோரும் ஒடிசா அரசு
கும்கி யானை - கோப்புப்படம்
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் தாக்குதல் பல பகுதிகளில் அதிகரித்துள்ளன. இதனால், அம்மாநில அரசு கடும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் யானைகளைக் கட்டுப்படுத்தி, அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதற்காக தமிழ்நாட்டைச் சார்ந்த 'கும்கி' யானைகளின் உதவியை அம்மாநில அரசு கோரியுள்ளது.
ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த, பிரத்யேகமான பயிற்சி அளிக்கப்பட்டுள்ள கும்கி யானைகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க கோரி, அம்மாநில வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, தமிழக வனத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "கடந்த சில மாதங்களாகவே ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் காட்டு யானைகளின் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உங்களுடைய பயிற்சி அளிக்கப்பட்ட கும்கி யானைகளை அனுப்புவதன் மூலம், அட்டூழியம் செய்யும் யானைகளைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும் வகையில் இருக்கும்.
மேலும், இந்த கும்கி யானைகளை வன ரோந்துப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் பயன்படுத்தக் கூடிய வகையில் மிகுந்த உதவிகரமாக இருக்கும். இதன் விளைவாக, இங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயப் பயிர்கள் சேதமடைவது, குடியிருப்புப் பகுதிகள் சேதமடைவது, யானைகள் மற்றும் மனிதர்களின் உயிரிழப்புகள் ஏற்படுவது ஆகியவை பெருமளவு கட்டுப்படுத்தக்கூடும்.
மேலும், தமிழக வனத்துறை கும்கி யானைகளுக்கு பயிற்சி அளித்து, வனவாழ்வியலை பாதுகாப்பதில் வெற்றி பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு, 4 கும்கி யானைகளை ஒடிசாவில் காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்னைக்குரிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டு இருந்தது.
தொடர்ந்து அக்கடிதத்தில், கும்கி யானைகளை பராமரிக்கும் பாகன்களையும் உடன் அனுப்பி வைக்குமாறும், அவர்கள் மூலம் ஒடிசாவில் உள்ள யானை பாகன்களுக்கு கும்கி யானைகளுடன் பழகுவதற்கான பயிற்சிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஒடிசாவில் நடைபெற்று வரும் மனித மிருக மோதல்களைக் கருத்தில் கொண்டு, இக்கடித்தை விரைவாக பரிசீலனை செய்யுமாறு, ஒடிசா மாநில வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹு, தமிழக வனத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசாவில், இந்த நிதியாண்டில் (2023-24) மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே 230 மோதல்கள் நடந்துள்ளன. இந்த மோதல்களில், 139 மனிதர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 108 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த நிதியாண்டில் 257 மோதல்களில் 146 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 157 பேர் காயமடைந்தனர். நடப்பு நிதியாண்டிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளதால், யானைகள் தாக்குதலால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இருக்கும்.
கும்கி யானைகள் வனவிலங்கு பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயிற்சியளிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் வெற்றிகரமான மற்றும் பாராட்டத்தக்க திட்டம் தமிழ்நாட்டில் உள்ளது என்று கூறிய அவர், ஒடிசாவின் மோதல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நிலைநிறுத்துவதற்கு குறைந்தது நான்கு கும்கி யானைகளையாவது வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
"இந்த யானைகள் நமது மாநிலத்தின் வனவிலங்கு அமைப்புக்கு விலைமதிப்பற்ற சொத்தாக இருக்கும், மோதல்களைக் குறைப்பதற்கும், மனித மற்றும் வனவிலங்குகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் எங்கள் முயற்சிகளுக்கு உதவுகின்றன. கும்கி யானைகளுடன் பழகுவதற்கு எங்கள் உள்ளூர் பாகன்களுக்கு ஆரம்ப கையடக்க ஆதரவை வழங்குவதற்காக, யானைகளுடன் அந்த கும்கி யானைகளைப் பராமரிக்கும் பாகன்களையும் நியமிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது,” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“ஒடிசாவில் மனித-யானை மோதல் பிரச்சினையின் தீவிரம் மற்றும் தீவிரத்தின் வெளிச்சத்தில், இந்த திட்டத்தை உடனடியாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு எங்களின் தற்போதைய பாதுகாப்பு முயற்சிகளுக்கு கணிசமாக பங்களிக்கும் மற்றும் ஒடிசாவில் வனவிலங்கு மோதல்களைத் தணிப்பதில் கருவியாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu