4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி பங்குகள்: இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசளிப்பு
நாராயண மூர்த்தி
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது நான்கு மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நா.ரா.நாராயண மூர்த்தி, தனது நான்கு மாத குழந்தைப் பேரன் ஏக்ரகா ரோஹன் மூர்த்திக்கு சுமார் ரூ.240 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் பங்குகளை பரிசாக அளித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸில் ஏக்ரகா ரோஹன் மூர்த்தி 15,00,000 பங்குகள் அல்லது 0.04 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
இந்தப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, இன்போசிஸில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்திலிருந்து 0.36 சதவீதமாகக் குறைந்துள்ளது, அதாவது 1.51 கோடிக்கும் அதிகமான பங்குகள். பங்குச் சந்தையின் விதிமுறைகளுக்கு இணங்க இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. பங்குச் சந்தைக்கு வெளியே நடந்த பரிமாற்றம் இது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
நாராயண மூர்த்தியின் பேரக் குழந்தைகள் பற்றி நமக்குத் தெரிந்தது என்ன?
கடந்த நவம்பர் மாதத்தில், நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர் தங்கள் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து தாத்தா, பாட்டியானார்கள். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தியின் இரண்டு மகள்களுக்குப் பிறகு, மூர்த்தி தம்பதியினருக்குப் பிறந்த மூன்றாவது பேரன் இவர்.
நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் பயணம்
நாராயண மூர்த்தி 1981 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், "நாஸ்டாக் பட்டியல் சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கு நிறுவனத்திற்கு உதவும்" என்று நாராயண மூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.
பெருமை கொள்ளும் தருணம் பற்றி நாராயண மூர்த்தி
சமீபத்தில், இது தனது பெருமைக்குரிய தருணம் என்று நாராயண மூர்த்தி பகிர்ந்து கொண்டார். India Today Conclave 2024 இல் பேசுகையில், “நாஸ்டாக்கில் நாங்கள் பட்டியலிடப்பட்டபோது, உயரமான மேடையில் கடுமையான விளக்கு வெளிச்சத்தில் நான் அமர்ந்திருந்தேன். நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் நாங்கள் என்பதால், அது பெருமையளிக்கும் தருணம். ஒரு இந்திய நிறுவனத்தால் செய்யப்படாத ஒன்றை நாங்கள் செய்துகொண்டிருந்தோம் என்ற எண்ணமே அலாதியானது" என்றார்.
நாராயண மூர்த்தியின் மிகப்பெரிய வருத்தம்
தனது மிகப்பெரிய வருத்தம் பற்றி பேசிய நாராயண மூர்த்தி, துணிச்சலான சில முயற்சிகளை தான் மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.
"எனக்கு வருத்தங்கள் ஏதும் இல்லை என்றுதான் நினைக்கிறேன், ஏனென்றால் முதல் நாளிலிருந்தே நாங்கள் விழிப்புணர்வுடன் செயல்படும் ஜனநாயக நிறுவனமாக இருந்தோம். நாங்கள் உண்மையான ஜனநாயகமாக இயங்காமல் இருந்திருந்தால் எடுத்திருக்கக்கூடிய மிகவும் துணிச்சலான சில நடவடிக்கைகள் இருந்தன. எனவே ஓரளவு, எங்களால் அடையக்கூடியதை விட எங்கள் வளர்ச்சி சற்று குறைவாகவே இருந்திருக்கலாம். இது வருத்தம் இல்லை என்றாலும், ஒரு குறை என்றுதான் சொல்லுவேன்," என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu