திருப்பதி கோவிலுக்கு சொந்தமான மின்சார பேருந்தை 'லவட்டிய' பலே கில்லாடி

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான மின்சார பேருந்தை லவட்டிய பலே கில்லாடி
X

மர்ம நபரால் திருடி செல்லப்பட்ட திருப்பதி கோவிலுக்கு சொந்தமான மின்சார பேருந்து 

மின்சார பேருந்து திருட்டு போனது சம்பந்தமாக தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் திருமலையில் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் பேருந்துகளை இயக்குவதால் திருமலை மாசு அடைந்து வருவதை தடுக்க தேவஸ்தானம் சார்பில் மின்சார பேருந்துகள் வழங்க தொழிலதிபர்கள் முன் வரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து தொழிலதிபர்கள் தலா ரூ.2 கோடி மதிப்பில் 10 மின்சார பேருந்துகளை தேவஸ்தானத்திற்கு வழங்கினர். இதனால் ஏற்கனவே திருமலையில் இயக்கப்பட்ட டீசல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

நேற்று இரவு இலவச பேருந்துகள் பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஓட்டுநர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 3:30 மணிக்கு வந்த மர்மநபர் ஒருவர் மின்சார பேருந்தை திருடிக் கொண்டு சென்றார்.

திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாயுடு பேட்டை என்ற இடத்தில் பேருந்து சென்ற போது பேட்டரியில் இருந்த மின்சாரம் தீர்ந்து போனது. இதனால் செய்வது அறியாது தவித்த மர்மநபர் பேருந்து அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

இந்நிலையில் ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்த பேருந்து ஓட்டுநர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்து காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டிக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த ஜிபிஆர்எஸ் கருவியை ஆராய்ந்த போது பேருந்து நாயுடு பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறை உதவியுடன் நாயுடு பேட்டைக்கு சென்ற தேவஸ்தான அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தை மீட்டு திருமலைக்கு கொண்டு வந்தனர். மின்சார பேருந்து திருட்டு போனது சம்பந்தமாக தேவஸ்தான போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பதியில் பிரமோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் பக்தர்களுக்காக இயக்கப்பட்டு வந்த மின்சார பேருந்தை திருடி சென்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் ஏற்கனவே பயணிகள் ஏற்றி சென்ற பேருந்து உணவு இடைவேளைக்காக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மர்மநபர் ஒருவர் பேருந்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் இருந்த பயணிகளிடம் டிக்கெட் பணம் வசூலித்துக் கொண்டு பாதி வழியில் நிறுத்தி விட்டு சென்ற சம்பவத்தில் கொள்ளையனை இதுவரை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்