மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட திட்டம்?

மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட திட்டம்?
X

வெற்றியின் அடையாளமாக இரட்டை விரலை காட்டும் அமித்ஷா,மோடி.

மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடியே மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமர் வேட்பாளர் மோடி

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்து முடிந்துள்ளது.முதல் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். தேசிய செயற்குழு கூட்டத்தில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தற்போதைய பிரதமர் மோடியே பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

நட்டா பதவியும் நீட்டிப்பு

மேலும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவி காலம் வருகிற 20ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அவரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை தலைவராக பதவியில் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

செயற்குழு காட்டிய கிரீன் சிக்னல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் மத்தியில் பாரதிய ஜனதாவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஊடகங்களால் கணிக்கப்பட்டு உள்ள சூழலில் பிரதமர் வேட்பாளரும் மோடி தான் என பா.ஜ.க. தேசிய செயற்குழு கிரீன் சிக்னல் காட்டி இருப்பது மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து உள்ளது.

வாரணாசி

குஜராத் முதல்வராக இருந்த மோடி முதல் முறையாக கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா நாடாளுமன்ற தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் அவர் அமோக வெற்றி பெற்ற நிலையில் வதோதரா தொகுதியை பின்னர் ராஜினாமா செய்து விட்டு வாரணாசி தொகுதி எம்.பி. பதவியில் மட்டுமே தொடர்ந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி என்ற ஒரே தொகுதியில் மட்டுமே மோடி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி (கோப்பு படம்)

ராமநாதபுரத்திலும் போட்டி?

இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் மோடி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்று வரலாற்று சாதனை படைப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியிலும், தமிழகத்தின் கடற்கரை நகரமான ராமநாதபுரம் மக்களவை தொகுதியிலும் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புண்ணிய நகரம்

காசி எனப்படும் வாரணாசி இந்துக்களின் புண்ணியநகரமாக கருதப்படுகிறது. அதனை தற்போது மோடி தனது சொந்த தொகுதி என்ற அடிப்படையில் அங்குள்ள கோவில்களில் பல புனரமைப்பு பணிகளை செய்துள்ளார். அங்கு நடத்தப்பட்ட தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். காசிக்கும் ராமநாதபுரம் அடங்கிய ராமேஸ்வரத்திற்கும் சங்க காலம் முதல் இருந்து வந்து ஆன்மிக மற்றும் வணிக ரீதியான தொடர்புகள் பற்றியும் தற்போது பேசப்பட்டு வருகிறது.

வெற்றிக்கு அடித்தளம்

இதனை பயன்படுத்தி காசிக்கு நிகரான ராமேஸ்வரம் அடங்கிய ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் வெற்றி பெறுவதுடன் அந்த வெற்றியின் மூலம் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை பலமாக கால் ஊன்றச்செய்வதற்கும் வழி வகை செய்ததாக அமையும் என பாரதீய ஜனதா கட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மோடி தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்து2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கும் அது ஒரு அடித்தளமாக அமையும் என கணிக்கப்பட்டு வருகிறது.

களப்பணி

பிரதமர் மோடி தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக வந்துள்ள செய்தி இன்னும் அதிகாரப்பூர்வாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியினரிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அங்கு களப்பணிகளை இப்போதே தொடங்க தயாராக உள்ளனர்.

Tags

Next Story