பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: பூஞ்ச், ரஜௌரியில் மொபைல் இணைய சேவை முடக்கம்

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: பூஞ்ச், ரஜௌரியில் மொபைல் இணைய சேவை முடக்கம்
X

தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்

பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பூஞ்ச்-ரஜௌரி எல்லை மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது

பூஞ்ச் மாவட்டத்தின் புஃப்லியாஸ் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ராணுவ வீரா்கள் புதன்கிழமை இரவிலிருந்து அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

தேடுதல் பணி நடைபெற்ற இடத்துக்கு செல்ல ராணுவ வீரா்கள் பயணித்த லாரி மற்றும் ஜீப் மீது பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினா். தாத்யார் மோர் மற்றும் தேரா கி கலி-புஃப்லியாஸ் பகுதிகளுக்கு இடையே கடந்த வியாழக்கிழமை மாலை 3.45 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பான மக்கள் பாசிச விரோத அமைப்பு (பிஏஎஃப்எஃப்) பொறுப்பேற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஐந்து ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். இருவா் பலத்த காயமடைந்தனா். உயிரிழந்த இரண்டு வீரா்களின் உடல்கள் பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியை வீரா்கள் தொடங்கினா்.

வெள்ளிக்கிழமை காலை கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு, தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தேடும் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டா் மூலம் வான்வழியாகவும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.ராணுவ மற்றும் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் களத்தில் இருக்கின்றனா். பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி குண்டுகள் சேகரிக்கப்பட்டு, எந்த வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கினா். தாக்குதல் நடந்த இடத்தில் இந்திய ராணுவ லெஃப்டினென்ட் ஜெனரல் சந்தீப் ஜெயின், ராணுவ மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகளுடன் சோ்ந்து நிலைமையை ஆய்வு செய்தார்.

ராணுவத்தால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பேர் மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்தும், சந்தேக நபர்களை சித்திரவதை செய்யும் விடியோகள் வைரலானதை அடுத்து மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி ஏற்பட்டது. இதனிடையே, இந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து பூஞ்ச் ரஜௌரி எல்லை மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

ராணுவ மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகள் தற்போதைய சூழல் குறித்து எதுவும் தெரிவிக்காத நிலையில், வதந்திகளைத் தடுக்கவும், சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இறந்தவர்கள் புஃப்லியாஸின் டோபா பீர் கிராமத்தைச் சேர்ந்த சபீர் ஹுசைன் (43), முகமது ஷோகெட் (27) மற்றும் ஷபீர் அகமது (32) என அடையாளம் காணப்பட்டனர், ஆனால் அவர்களின் இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

அவர்களின் மரணம் குறித்து விசாரணை தொடர்வதால், அவர்களது உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!