துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய மாவோயிஸ்டுகள்!
வயநாடு பகுதியில் தோன்றிய மாவோயிஸ்ட்கள்
கேரளா மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும் எம்பியுமான டி.ராஜாவின் மனைவி ஆனிராஜா, பாஜக சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்பதால் வயநாடு தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனை ஒட்டி நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது. வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம்.
மேலும் கேரளா மாநிலம் முழுவதும் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ள மலப்புரம், வயநாடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் காவல்துறையினர், துணை ராணுவபடையினர் மற்றும் தண்டர் போல்டு எனப்படும் சிறப்பு அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை பகுதியில் இன்று காலை 6 மணிக்கு ஊருக்குள் புகுந்த சோமன், மனோஜ், சந்தோஷ், சி.பி.மொய்தீன் என்ற நான்கு மாவோயிஸ்ட்டுகள் கிராம மக்களிடையே திடீரென தோன்றி அடிப்படை வசதிகள் செய்து தராத அரசுகளை கண்டித்து மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றனர்.
மேலும் தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் கவனத்தை ஈர்க்க முடியும் என தெரிவித்த அவர்கள் மக்களுக்காக போராடி வருவதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கிருந்த கிராம மக்கள் தங்களுக்காக நீங்கள் போராடுவது என்றால் காட்டை விட்டு வெளியே வந்து நகர் பகுதியில் போராடுங்கள் என்றனர். அதற்கு விரைவில் நகர் பகுதியில் போராட்டங்களை மேற்கொள்வோம் என மாவோயிஸ்ட்டுகள் கூறிச் சென்றனர்.
இதனிடையே மாவோயிஸ்ட்டுகள் கிராம மக்களிடையே உரையாற்றுவதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வளை தளங்களில் பரவி வருகிறது.
வழக்கமாக கேரள பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இரவு பகுதியில் ஆங்காங்கே இருப்பதாக சொல்லப்படும் நிலையில் முதன் முதலாக மாவோயிஸ்டுகள் கிராமத்திற்குள் புகுந்து மக்களிடையே உரையாற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவோயிஸ்ட்டுகள் மக்கள் மத்தியில் தோன்றும் முதல் வீடியோ காட்சி இதுவாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu