இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் மாலத்தீவு? என்ன காரணம்?

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
இந்தியாவுடனான அணுகுமுறையை மென்மையாக கையாள தொடங்கி உள்ளார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டி அளித்த முகமது முய்சு, மாலத்தீவுக்கு வழங்கிய கடனை திரும்பப் பெறுவதில் இந்தியா மென்மையான போக்கை கையாள வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 400 புள்ளி 9 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் தொகையை இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் மாலத்தீவு உள்ளது. மாலத்தீவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான 6 புள்ளி 190 பில்லியன் டாலரில் இந்தியாவுக்கான கடனை திருப்பிச் செலுத்தவது என்பது கடினம் தான்
ஏற்கனவே மாலத்தீவின் ஒட்டுமொத்த கடன் 3, 577 பில்லியன் டாலராக உள்ள நிலையில், அதில் 42 சதவீதம் சீனாவுக்கு மட்டும் வழங்க வேண்டி உள்ளது. இந்தியாவுக்கு மட்டும் 517 மில்லியன் டாலர் கடன்பட்டு உள்ளது மாலத்தீவு. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மாலத்தீவுக்கு 93 மில்லியன் டாலர் கடனாக வழங்கி உள்ளது.
மாலத்தீவின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடை அதிபர் முகமது முய்சு கொண்டு இருந்த போதும், இந்த கடன் தொகை மாலத்தீவின் பட்ஜெட்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடினமான காலங்களை எதிர்கொண்ட மாலத்தீவுக்கு பலநேரங்களில் பக்கலமாக இந்தியா இருந்து உள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவில் ஆட்சியை கவிழ்க்க நடந்த சதியை தனது படைகளை அனுப்பி முறியடித்து மீண்டும் மாலத்தீவு அரசிடமே ஆட்சியை ஒப்படைத்த பெருமை இந்தியாவுக்கு உண்டு.
மாலத்தீவிற்கு உதவி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்காற்றியது என்றும், மாலத்தீவில் அதிக அளவிலான திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருவதாகவும் ஒப்புக்கொண்ட முய்சு கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கடன் நிவாரண நடவடிக்கைகளை இந்தியா எளிதாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அபுதாபியில் நடந்த பருவநிலை மாற்றத்திற்கான ஐநாவின் மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பிற்காக பிரதமர் மோடிக்கு தனது பாராட்டை தெரிவித்து உள்ளார் முகமது முய்சு. இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்த விரும்பவில்லை என்றும், மாறாக இந்தத் திட்டங்களை வலுப்படுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டதாகவும் முகமது முய்சு கூறி உள்ளார்.
இந்திய விசுவாசியாக மாலத்தீவு அதிபர் திடீரென மாற என்ன காரணம் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் திடீர் பல்டிக்கு நான்கு காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முதலாவதாக தற்போது உள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியாவுக்கு 400 மில்லியன் டாலர் கடனை வெறும் 9 மாத இடைவெளியில் திருப்பிச் செலுத்துவது என்பது மாலத்தீவு அரசுக்கு இயலாத காரியம்.
இரண்டாவதாக மாலத்தீவுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ள சீனா 130 மில்லியன் அமெரிக்க டாலர்களை மானியமாக அறிவித்து உள்ளது. அதேநேரம், அண்மையில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, எதிர்காலத்தில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு மாலத்தீவு செல்லக் கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து மேற்கொண்டு உதவும் நிலைப்பாட்டில் சீனா இல்லை என்பதை அறிந்து கொண்டதாக தெரிகிறது.
மூன்றாவதாக அண்மையில் சர்வதேச நாணய நிதியம் மாலத்தீவுக்கு அளித்த பொருளாதார எச்சரிக்கையால் இந்தியாவுடனான உறவில் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் முகமது முய்சு தள்ளப்பட்டதாக தெரிகிறது.
கடைசியாக, இந்தியாவுடனான உறவை கையாளுவதில் பிடிவாதமாக இருக்கக் கூடாது என்று முகமது முய்சுவின் அரசியல் குரு முகமது சோலிஹ் வழங்கிய அறிவுரையிலும், உள்நாட்டில் எதிர்க்கட்சிகளின் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடிற்கு தொடர்ந்து எதிர்ப்பு கொடி காட்டி வருவதும் கூட அதிபர் முகமது முய்சுவின் திடீர் மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu