மாரடைப்பு காரணமாக பறக்கும் விமானத்தில் உயிரிழந்த மலேசிய பயணி

மாரடைப்பு காரணமாக பறக்கும் விமானத்தில் உயிரிழந்த மலேசிய பயணி
X

கோப்புப்படம் 

துபாயிலிருந்து மலேசியா சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் பயணிகள் விமானத்தில் பயணித்த மலேசியா நாட்டுப் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.

துபாயில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 268 பயணிகளுடன் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் நேற்று காலை 10.30 மணிக்கு கோலாலம்பூரில் தரையிறங்க வேண்டும்.

இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், அதில் பயணித்த மலேசியாவை சேர்ந்த பெண் பயணி ரஷிதா அகமத்(57) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். உடனடியாக விமானப் பணிப்பெண்கள், ரஷிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, தலைமை விமானிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தலைமை விமானி, சென்னை வான்வெளியில் பறந்து கொண்டு இருப்பதை அறிந்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக, விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார். உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விமானத்தை உடனடியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதித்து, தேவையான மருத்துவ உதவிகளை வழங்க உத்தரவிட்டனர். இதையடுத்து துபாய் - கோலாலம்பூர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அவசரமாக இவ்விமானம் தரையிறங்கியது.

தொடர்ந்து, சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் உடனடியாக விமானத்துக்குள் ஏறி ரஷிதா அகமத்தை பரிசோதித்தனர். ஆனால், அவர் தனது இருக்கையில் தலை சாய்ந்த நிலையில் இருந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக கூறினர். இதையடுத்து, தகவலறிந்து வந்த சென்னை விமான நிலைய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, பெண் பயணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெண் பயணி மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புனித பயணமாக சென்று விட்டு, மீண்டும் மலேசியாவிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த சோகம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மலேசியா நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கு சென்னை விமான நிலைய காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுத்தப்படுத்தப்பட்டு, 2 மணிநேரம் தாமதமாக சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!