சபரிமலையில் இன்று 90,000 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி

சபரிமலையில் இன்று 90,000 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி
X

சபரிமலை ஐயப்பன் கோவில் (கோப்பு படம்)

மகர விளக்கு சீசனின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் அருள்பாலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை காண்பது பலருக்கும் ஆனந்தம். சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளில் பங்கேற்று வருகின்றனர்.

மண்டல பூஜைக்காக நவம்பரில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் மாதம் மண்டல பூஜை நிறைவுபெற்று நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல் சாந்தி முரளி நடையை திறந்தார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சபரிமலையில் இன்று 90,000 பேருக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புக்கிங் செய்த 80,000 பேரும், நேரடியாக புக்கிங் செய்த 10,000 பேரும் இன்று தரிசனம் செய்கிறார்கள்.

மகர விளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 15-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை போன்று மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 15ம் தேதி வரை ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!