சபரிமலையில் இன்று மகரஜோதி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலையில் இன்று மகரஜோதி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
X

சபரிமலை ஐயப்பன்

சன்னிதானம் மற்றும் சபரிமலை முழுவதும் கண்காணிப்பு பணி மற்றும்பாதுகாப்புப் பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கேரள மாநிலம் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தொற்றுக்குப் பிறகு சபரிமலையில் மீண்டும் வழக்கம் போல பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது.

நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்த நிலையில் ஆன்லைன் மற்றும் உடனே உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வந்தனர். அத்துடன் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டது.

மண்டல பூஜை நிறைவடைந்து கடந்த 27ஆம் தேதி நடை அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி நடைபெற உள்ளது.

ஏற்கனவே நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பொன்னம்பலம் மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் மூன்று முறை காட்சி தரும் நிகழ்வு நடைபெற உள்ளது. எனவே மகரஜோதி நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பம்பை முதல் சன்னிதானம் வரையிலும் பக்தர்கள் நெரிசல் இல்ல செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. சன்னிதானம் மற்றும் சபரிமலை முழுவதும் கண்காணிப்பு பணி மற்றும்பாதுகாப்புப் பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மகரவிளக்கு தினத்தன்று கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் வரை போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முதல் இவர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களைத் தவிர பேரிடர் மீட்பு படையினர், சுகாதார துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

கோவிலுக்கு வருகிற பக்தர்கள் நெரிசல் இன்றி சன்னிதானம் செல்லவும், அங்கு 18ம் படி ஏறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசன நாளான ஜனவரி 14ம் தேதி மதியம் 12 மணி வரை மட்டுமே, சன்னிதானம் செல்ல சபரிமலை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 12 மணிக்கு மேல் பக்தர்கள் பம்பையில் இருந்து, சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 14ம் தேதி இரவு 8.45 மணிக்கு மகர சங்ரம பூஜை நடக்கிறது. மறுநாள் ஜனவரி 15ம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

கடந்த 56 நாட்களில் மட்டும் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் ரூ. 310 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!