எல்ஐசி சொத்துகளில் 1 % கூட அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்படவில்லை: மத்திய அரசு
பைல் படம்.
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால், கடந்த இரண்டு வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்பிஐ வங்கியும் கடன் வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அதானிக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தில் செய்த முதலீடு தொடர்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் மோடி கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் கூறியிருப்பதாவது: இதுவரை எல்ஐசி நிறுவனம் அதானி குழும பங்குகளை வாங்கியுள்ளதன் மதிப்பு சுமார் 30,127 கோடி ரூபாய். ஜனவரி 27ம் தேதியின் படி அந்த பங்குகளின் சந்தை மதிப்பு 56,142 கோடி ரூபாய். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் படி, எல்ஐசி கையாளும் மொத்த சொத்துக்களின் மதிப்பு 41.66 லட்சம் கோடி ரூபாய். இதன்படி, எல்ஐசி கையாளும் மொத்த சொத்துகளில் 0.975 சதவீதம்தான் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி போர்ட் நிறுவனத்தில் செய்திருந்த முதலீட்டை 2 சதவீதமாக எல்ஐசி குறைத்துள்ளது.
எல்ஐசி முதலீடு குறித்த பெரும்பாலான தகவல்கள் பொது வெளியில் உள்ளது. மேலும் காப்பீடு சட்டம் 1938-ன் படியும் ஐஆர்டிஏ முதலீட்டு விதிமுறைகளின் படியே எல்ஐசி முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய இணையமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu