திருப்பதியில் சிறுமியை தாக்கிய சிறுத்தை கூண்டில் சிக்கியது

சிறுமியை தாக்கிய சிறுத்தை கூண்டில் சிக்கியது
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றன
நேற்று முன்தினம் நெல்லூர் மாவட்டம், போத்தி ரெட்டி பாலத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். அவரது மனைவி சசிகலா. மகள் லக்ஷிதா (வயது 6) ஆகியோர் திருப்பதி வந்தனர். இரவு 7.30 மணி அளவில் தினேஷ் குமார் மனைவி, மகளுடன் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது பெற்றோர் கைகளை பிடித்து வந்த சிறுமி அவர்களை விட்டு வேகமாக படியேறி சென்றார்
நரசிம்ம சாமி கோவில் அருகே நடந்து சென்றபோது லக்ஷிதா திடீரென காணாமல் போனார். சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடைபாதையில் பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் மகளை காணாததால் பதற்றம் அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் இரவு முழுவதும் வனப்பகுதியில் லக்ஷிதாவை தேடி வந்தனர்.
மேலும் மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி தனது பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு தேடினர். அப்போது சிறுமி லக்ஷிதாவின் உடல் நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது
சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் எச்சம் கிடந்தது. இதனால் சிறுமியை சிறுத்தை இழுத்துச்சென்று அடித்து கொன்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டினர்.
சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கிக்கொண்டது. பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu