விக்டோரியா கௌரி நீதிபதியாக பதவியேற்பு: மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
வழக்குரைஞா் விக்டோரியா கெளரி சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்கவிருக்கும் நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பு மூத்த வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன் திங்கள்கிழமை முறையிட்டார். இதையடுத்து, இன்று காலை 9.15 மணியளவில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது நீதிபதிகள், விக்டோரியா கௌரியின் பதவி ஏற்பதற்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அவரது தகுதி குறித்த சந்தேகத்திற்கு இடமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், "எங்களால் கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்படுவதன் பொருத்தப்பாட்டை கேள்விக்குள்ளாக்க முடியாது, கொலீஜியத்தின் செயல்முறை மீது சந்தேகம் எழுப்ப முடியாது," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது லக்ஷ்மண சந்திர விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
வழக்கறிஞர்கள், அவரது கருத்துகள் இயல்பில் தீவிரமானவை எனக் கூறி, அவரது முன்னாள் முகம் நீதிபதியாக இருக்கத் தகுதியற்றது என்றனர்.
ஆனால், "நாங்கள் மனுவை ஏற்றுக்கொண்டால், மிகவும் தவறான முன்னுதாரணத்தை அமைத்துவிடுவோம்," என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்தனர். மேலும், அவர் கூடுதல் நீதிபதியாக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் செயல்திறன் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய நியமனங்கள் நிரந்தரம் செய்யப்படாத நிகழ்வுகளும் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
'இவருடைய பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற வேண்டும்' என்று சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் எதிர்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்திடமும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கும் அவா்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனா்.
'தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்தவ அமைப்புகளா என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாசார படுகொலை செய்வதாகவும் வழக்குரைஞா் விக்டோரியா கெளரி பேசிய காணொலி சமூக வலைதளங்களில் உள்ளது' என்று தங்களது மனுவில் மூத்த வழக்குரைஞா்கள் குறிப்பிட்டிருந்தனா்.
உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுபவா்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதிகளாகப் பதவி உயா்வு அளிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu