காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி
X
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் 24 ஆண்டுகால இடைவெளிக்குப்பின், கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

கார்கே காந்தி குடும்பத்தின் அதிகாரப்பூர்வமற்ற உத்தியோகபூர்வ வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே கருதப்பட்டாலும், அவருக்கு ஆதரவாக ஏராளமான மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், சசி தரூர் தன்னை மாற்றத்தின் வேட்பாளராக நிறுத்தினார். ஏறக்குறைய 137 ஆண்டுகால வரலாற்றில், கட்சியின் தலைவர் யார் என்பதை தேர்தல் போட்டி முடிவு செய்வது இது ஆறாவது முறையாகும்.

மொத்தம் 9,915 மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளில், சுமார் 9,500க்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்கினை ரகசிய வாக்குச் சீட்டு முறைப்படி புதிய தலைவரை தேர்வு செய்ய வாக்களித்தனர். இந்த தேர்தல் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், நாடு முழுவதும் உள்ள 65 வாக்குச் சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று டெல்லியில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிகை நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்று, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக காங்கிரஸின் காந்தி அல்லாத முதல் தலைவராக வழி வகுத்துள்ளார். மொத்தமுள்ள 9,385 வாக்குகளில் கார்கே 7,897 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்று பின்தங்கினார். 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி பதவி விலகியதில் இருந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்திக்குப் பதிலாக கார்கே நியமிக்கப்படுவார்.

கார்கேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தரூர், "கட்சியின் மறுமலர்ச்சி இன்று தொடங்குகிறது" என்று தான் நம்புவதாகவும், காங்கிரசின் தலைவராக இருப்பது ஒரு பெரிய மரியாதை மற்றும் மிகப்பெரிய பொறுப்பு, மேலும் இந்த பணியில் கார்கே அனைத்து வெற்றிகளையும் பெற விரும்புகிறேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்னதாக, தேர்தலின் போது சில முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சசி தரூர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். காங்கிரஸ் பிரதிநிதிகள் அதிகம் உள்ள உத்தரபிரதேசம் உட்பட மூன்று மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததாக சசி தரூர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!