கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பதவி ரத்து.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
நீதிமன்றத்தால் எம்எல்ஏ பதவி ரத்து செய்யப்பட்ட ராஜா. (கோப்பு படம்).
நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்களாக போட்டியிடுபவர்கள் சில ஆவணங்களை முறையாக தங்களது வேட்பு மனுவில் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுவில் தவறான தகவல்களை குறிப்பிட்டாலோ அல்லது உண்மைக்கு புறம்பாக தகவல்களை மறைத்தாலோ அது சட்டப்படி குற்றம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு கேரள சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலின் போது, தமிழரான ராஜா ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக குமார் என்பவர் போட்டியிட்டார். ராஜா தனது வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர் என்பதை மறைத்து பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என போலியாக ஜாதி சான்றிதழ் தயாரித்து கொடுத்து, தனி தொகுதியில் போட்டியிடுவதாக குமார் குற்றம் சாட்டினார்.
மேலும் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இருந்த போதும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ராஜா,குமாரை விட ஏழாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து பட்டியல் இன மக்கள் போட்டியிட வேண்டிய தனி தொகுதியில் ராஜா போட்டியிட்டதால் அந்தத் தேர்தல் செல்லாது என அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இதனால் ராஜாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி தானாகவே பறிக்கப்பட்டு உள்ளது. தமிழரான ராஜா தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பையும், கோவை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தவர் ஆவார். கேரளாவில் தற்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு ராஜா தள்ளப்பட்டுள்ளார். ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏவின் மோசடியை பாருங்கள் என தற்போதே எதிர்கட்சிகள் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டதால், கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu