தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சந்திரசேகர ராவ்

சந்திர சேகர ராவ்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தெலுங்கானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 115 இடங்களுக்கான வேட்பாளர்களை பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) திங்கள்கிழமை அறிவித்தது. பிஆர்எஸ் தலைவரும், மாநில முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் அல்லது கே.சி.ஆர், கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
ஏழு சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கேசிஆர் கூறினார். மேலும் கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் அக்டோபர் 16ஆம் தேதி வாரங்கலில் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளையும் ஆச்சர்யத்திற்குள் ஆழ்த்தும் வகையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நர்சாபுர், நம்பல்லி, கோஷமஹால், ஜன்கயோன் ஆகிய நான்கு இடத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சந்திரசேகர ராவ், ''நாங்கள் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்'' எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருந்த பட்டியலில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் போட்டியிடுகிறார். அத்துடன் தற்போது கமரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த கட்சியை சேர்ந்த கம்பா கோவர்தன் தொடர்ந்து நான்கு முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தலில் ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். அந்த கூட்டணி தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிதான், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தற்போது, வேட்பாளர்களுக்கான விண்ணப்பத்தை வினியோகம் செய்துள்ளது. கடந்த 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
பாரத ராஷ்டிர சமிதியின் முக்கிய வேட்பாளர்களை இங்கே பார்க்கலாம்
சந்திரசேகர ராவ் இந்த ஆண்டு காமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கல்வகுந்த்லா தாரக ராமராவ் அல்லது கே.சி.ஆர் மகன் கே.டி.ஆர் சிர்சில்லாவில் போட்டியிடுவார்.
கேசிஆர் மருமகன் ஹரிஷ் ராவ், சித்திபேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.
தெலுங்கானா சட்டப் பேரவையின் சபாநாயகர் போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பான்ஸ்வாடா தொகுதியில் போட்டியிடுகிறார்.
தெலுங்கானா மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மல்லா ரெட்டி, மேட்சல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாடி கௌசிக் ரெட்டி, தற்போது பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் ஈடெலா ராஜேந்தர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹுசுராபாத்தில் போட்டியிடுகிறார்.
மைனம்பள்ளி ஹனுமந்த் ராவ், மல்காஜ்கிரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தெலுங்கானா மாநில கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, மகேஸ்வரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பைலட் ரோஹித் ரெட்டி தந்தூரில் தேர்தலில் போட்டியிடுகிறார்.
கலால் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட் மஹ்பூப்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu