கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும்: கர்நாடக ஐகோர்ட்

கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடகாவில், குந்தாப்புரா பகுதி அரசு கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் 'ஹிஜாப்' அணிந்து வகுப்புக்கு வர, கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய மாணவிகள், அதே கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இதற்கு சவாலாக இந்து மாணவ-மாணவியர், காவி துண்டு அணிந்து வகுப்புக்கு வந்ததால், பெரும் பரபரப்பு நிலவியது. உடுப்பி, பெல்லாரி, மண்டியா, விஜயாப்புரா, பெலகாவி, சிக்கமகளூரு என்று பல இடங்களில் இவ்விவகாரம் சூடுபிடித்தது. இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் மாநிலத்தில் பதற்றம் நிலவியது. பள்ளி-கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
அரசின் தடையை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் 18 பேர், ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுக்களை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித், வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றினார்.
பின்னர், தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை விசாரித்தது. இவ்வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை அளித்தது.
அதன்படி, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியம் என்று கூறப்படவில்லை. எனவே, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த அரசின் முடிவு செல்லும். அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்கள் தான். ஹிஜாப் அணிய தடை விதித்தற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக, நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu