கர்நாடக கல்லூரி மாணவி கொலை வழக்கு: சிஐடி விசாரணைக்கு உத்தரவு!

கர்நாடக கல்லூரி மாணவி கொலை வழக்கு: சிஐடி விசாரணைக்கு உத்தரவு!
X
கல்லூரி மாணவி கொலை வழக்கு, சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்

கர்நாடகத்தின் ஹுப்பளி நகரில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை (ஏப். 18) அன்று, முகமூடி அணிந்து வந்திருந்த 23 வயதான அந்த கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர் ஃபயாஸ் என்பவர், அதே கல்லூரியில் முதலாமாண்டு எம்சிஏ பாடப்பிரிவில் பயின்று வந்த நேஹா ஹிரேமட்டா(24) என்ற மாணவியை 7 முறை கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒருதலைக் காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை நிகழ்த்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், கல்லூரி மாணவி கொலை வழக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவு(சிஐடி) விசாரணைக்கு மாற்றப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவியை கொன்ற ஃபயாஸ் கோண்டுநாய்க் என்ற மாணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மேற்கொண்டு சிஐடி காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான ஃபயாஸ் மட்டுமன்றி மேலும் நால்வருக்கு தொடர்பிருப்பதாக மாணவி நேஹாவின் தந்தையும், ஹூப்பளி நகர காங்கிரஸ் கவுன்சிலருமான நிரஞ்சன் ஹயர்மாத் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாணவி நேஹாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏபிவிபி) அமைப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இன்று (ஏப். 22) பெங்களூரில் போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!