பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன்
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது
செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பாத யாத்திரையில் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல தரப்பினரும் ராகுல்காந்தியுடன் இணைந்துள்ளனர்.
இதனிடையே, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று 108-வது நாளை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அரியானாவில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை இன்று டெல்லிக்குள் நுழைந்துள்ளது. டெல்லியில் ராகுல்காந்தியுடன், அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இன்று காலை யாத்திரை மேற்கொண்டனர். அவர்களுடன் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
பின்னர் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் இரண்டு கொள்ளுபேரன்கள் இணைந்து நடக்கிறோம். ராகுல்காந்தி காந்தியின் கொள்ளுப்பேரன். நான் நேருவின் கொள்ளுபேரன் எனது அரசியல் பயணம் எனக்காக தொடங்கியது அல்ல, மக்களுக்காக தொடங்கியது. என்னை யாரும் இந்த யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் எனக் கூறினர். ஆனால் இந்திய குடிமகனாக இந்த யாத்திரையில் கலந்துகொள்கிறேன்.
மாற்று கொள்கைகள் இருந்தாலும் தேசிய ஒற்றுமைக்காக இந்த யாத்திரையில் கலந்துகொள்கிறேன். ராகுல்காந்தி தான் ஒரு தமிழர் என்றார். அதனால் நான் அவரது சகோதரர். தேசத்தின் ஒற்றுமைக்காக யாத்திரையில் பங்கேற்றுள்ளேன். ராகுல்காந்தி சொன்னதால் தமிழில் உரையாற்றுகிறேன்.
இந்த யாத்திரையை அரசியல் தொடக்கமாக கருதுகிறேன். அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பது அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கூறினார்கள், ஆனால் எனது மனசாட்சியை கேட்டு பயணத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன் எனக் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu