நாளை ஜே.இ.இ. மெயின் தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு
பைல் படம்.
நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்து ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து என்ஜினீயரிங் படிக்க ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு 2 முறை நடத்தப்படுகிறது. அதில் முதல் கட்ட ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு நாளை (24-ம் தேதி) தொடங்குகிறது.
31-ம் தேதி வரை இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 8 லட்சம் முதல் 9 லட்சம் வரை தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.
2-ம் கட்ட ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களும், பங்கேற்காதவர்களும் 2-ம் கட்ட தேர்வை எழுத முடியும். ஜே.இ.இ. நுழைவு தேர்வு நடக்கும் நாட்களில் சில சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் செய்முறை தேர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது. சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்ச்சிக்கு மொத்த மதிப்பெண்ணில் செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் கட்டாயம் என்பதால் இந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது மிகவும் அவசியமாகும். எனவே ஜே.இ.இ. மெயின் தேர்வு நடைபெறும் நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தாமல் வேறு நாட்களுக்கு மாற்றும்படி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu