2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகிறாரா பிரசாந்த் கிஷோர்?

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகிறாரா பிரசாந்த் கிஷோர்?
X

பிரசாந்த் கிஷோர்.

பாதயாத்திரை செல்வதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பி.கே. என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர் பிரசாந்த் கிஷோர். யார் இந்த பிரசாந்த் கிஷோர்?. நமது நாட்டின் பாமரன் குப்பனுக்கும் சுப்பனுக்கும் இவர் யார் என்று தெரியாது. ஆனால் இந்த குப்பனும் சுப்பனும் ஜனநாயக திருவிழாவான தேர்தலில் ஓட்டு போட்டு தேர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒரு அரசாங்கத்திற்கு நிழல் ஆலோசகராக இருந்து தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுப்பதில் வல்லவர் தான் பிரசாந்த் கிஷோர்.


இந்திய அளவில் இவரை தெரியாத அரசியல் தலைவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பிரசாந்த் கிஷோர் ஒரு தேர்தல் வியூக அமைப்பாளர் ஆவார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைத்துக் கொடுத்தார். தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் மோடி பிரதமர் ஆனார். இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அந்த வெற்றியின் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருந்தது பின்னர் தான் தெரியவந்தது. அதன் பின்னர் அவரது தேர்தல் வியூக பணி மேலும் விரிவடைந்தது. இந்தியா முழுவதும் அவரது பெயர் பிரபலமானது.

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு திட்டம் வகுத்து கொடுத்தார். அதில் வெற்றியும் கண்டார். 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வின் வெற்றிக்கான பிரச்சார யுக்தியை பிரசாந்த் கிஷோர் அமைத்துக் கொடுத்தார். அவரது தலைமையிலான ஐபேக் டீம் குழுவினர் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முன்கூட்டியே தங்களின் ஆட்களை அனுப்பி வைத்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு, நிறைகுறை ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி பிரச்சாரத் திட்டங்களை வகுத்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் அளித்தனர். முழுக்க முழுக்க பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின் படியே ஸ்டாலினின் பிரச்சாரமும் இருந்தது.

திருச்சி அருகே சிறுகனூர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்ட மாநாடு கடந்த கால தி.மு.க. பொதுக்கூட்ட பிரச்சார யுக்திகளில் இருந்து மாறுபட்டு சினிமா பாணியில் இருந்தது என்று சொன்னால் அதுவும் பிரசாந்த் வகுத்து கொடுத்த திட்டத்தின் அடிப்படையில் நடந்ததுதான். இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் தான் வர்றாரு... விடியல் தரப் போறாரு என்ற இசையுடன் கூடிய ஒரு பாடல் அனைவரது வாயினையும் முணுமுணுக்க வைத்தது. தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தற்போது முதலமைச்சராக மு. க.ஸ்டாலின் உள்ளார். இந்த வெற்றிக்கு பின்னால் இருந்து வியூகம் அமைத்துக் கொடுத்ததற்காக பல கோடி ரூபாய் அவருக்கு கட்டணமாக கொடுக்கப்பட்டது என்று பிரசாரமும் செய்யப்பட்டது உண்டு.

இத்தகைய ஒரு தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ஆவார்.ஆரம்பத்தில் இவர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து செயல்பட்டார். அந்த கட்சியினுடைய மாநில அளவிலான துணைத்தலைவராகவும் ஒரு காலத்தில் இருந்தார். பின்னர் ஐக்கிய ஜனதாவும் கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கப் போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில் தான் பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தில் ஒரு பாதயாத்திரை திட்டத்தை தொடங்கி இருக்கிறார்.


இந்த திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மக்களின் மனநிலை பற்றி அறிய இருக்கிறார். மகாத்மா காந்தி பிறந்த நாளான அதாவது காந்தி ஜெயந்தி தினமான இன்றைய தினம் பீஹார் மாநிலத்தின் சம்ரான் மாவட்டத்தில் இருந்து இந்த பாதயாத்திரையை பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ளார் .இந்த இடத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்னவென்றால் 1917 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தனது சத்தியாகிரக போராட்டத்தை இங்கிருந்துதான் முன்னெடுத்தார் என்பது கடந்த கால வரலாறு. இந்த பாதயாத்திரை மூலம் பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார்.இந்த திட்டத்திற்கு அவர் 'ஜன் சூரஜ்' என்ற பெயரினை சூட்டியுள்ளார். இந்த பாதயாத்திரை சுமார் 18 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த பாதயாத்திரையின் போது மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு அரசியல் கட்சி தொடங்குவதற்கு வெள்ளோட்டமாகவே இந்த பாதயாத்திரையை அவர் தொடங்கி இருக்கிறார் என அரசியல் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.அவரது பிரச்சார நடை பயணம் சுமார் ஒரு மாத காலத்தை எட்டியுள்ளது.இந்த சூழலில் தான் அவருக்கு போட்டியாக பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ள இந்த யாத்திரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


அநேகமாக2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தனியாகவோ அல்லது ஒரு அரசியல் கட்சியை தொடங்கியோ தேர்தல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை நாள் தான் அதிகாரத்திற்கு வருவோருக்கு நிழலாக இருந்து திட்டம் வகுத்துக் கொடுப்பது ஏன் நாமே திட்டம் வகுத்து நாமே அதனை செயல்படுத்தினால் அதிகாரம் நேரடியாக நம் கைக்கு வந்து விடும் அல்லவா? என பிரசாந்த் கிஷோர் நினைத்து இருக்கலாம்.அதன் விளைவே அவரது இந்த பாதயாத்திரை திட்டமாக இருக்கலாம்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?