அண்ணாமலையை தொடர்ந்து மற்றொரு கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி பா.ஜனதாவில் சேர முடிவு?

அண்ணாமலையை தொடர்ந்து மற்றொரு கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி பா.ஜனதாவில் சேர முடிவு?
X

கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வரும் ரவி டி.சன்னன்னவர்

அண்ணாமலையை தொடர்ந்து கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி ரவி டி.சன்னன்னவரும் பா.ஜனதாவில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை தோல்வியை தழுவினாலும், தமிழக பா.ஜனதா மாநில தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அண்ணாமலையை தொடர்ந்து கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வரும் ரவி டி.சன்னன்னவரும் பா.ஜனதாவில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கதக் மாவட்டத்தை சேர்ந்த ரவி டி.சன்னன்னவர், பெங்களூரு புறநகர் மாவட்டம், தாவணகெரே, பெலகாவி, சிவமொக்காவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார். தற்போது பெங்களூரு சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக ரவி டி.சன்னன்னவர் பணியாற்றி வருகிறார். நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி என பெயர் பெற்றவர் ரவி டி.சன்னன்னவர்.

கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வர் பதவியை இழந்ததும், பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக பதவி ஏற்றிருந்தார். அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த சில நாட்களாக அவர் டெல்லியில் முகாமிட்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி ரவி டி.சன்னன்னவரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தார். அங்கு அவர், பா.ஜனதா தேசிய அமைப்பு செயலாளரும், கர்நாடகத்தை சேர்ந்தவருமான பி.எல்.சந்தோஷ் மற்றும் சில பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பா.ஜனதாவில் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தையின் போது ரவி டி.சன்னன்னவரை பா.ஜனதாவில் சேர்ப்பது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

வருகிற 2023-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐ.பி.எஸ். அதிகாரி ரவி டி.சன்னன்னவரை போட்டியிட வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. பா.ஜனதாவில் சேருவதற்காக ஐ.பி.எஸ். பணியை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி ரவி டி.சன்னன்னவர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!