சர்வதேச செவிலியர் தினம்...

சர்வதேச செவிலியர் தினம்...
X
சேவை... பரிவு... உழைப்பு...!

உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செவிலியரான இவர் 'கைவிளக்கு ஏந்திய தேவதை' (தி லேடி வித் தி லாம்ப்) என்று எல்லேராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் இருந்து வந்த அவர். 'கிரிமியன்' போரின் போது செவிலியராக அவரது பணியை தொடங்கியுள்ளார்.

செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர்களுக்கான நைட்டிங்கேல் பயிற்சிப் பள்ளியை 1860-ம் ஆண்டு உருவாக்கி ஆயிரக்கணக்கானோரை செவிலியராக்கினார். அவர் பிறந்து 200-வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கடந்தஆண்டு செவிலியர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் - பிரான்சிஸ். இவர்களுக்கு 3-வது குழந்தையாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 1820-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பிறந்தார்.

ஜெர்மன், பிரஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் புலமை பெற்ற இவர், 'அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாகவே இருக்கிறது' என்ற வேத வாசகத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இதனால் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக செவிலியர் படிப்பு படிக்க ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் பெற்றோர்கள், அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். திருமணம் செய்ய மறுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி 1844-ம் ஆண்டு, நைட்டிங்கேல் ஜெர்மனியின் கைசர்வெர்த்தில் உள்ள பாஸ்டர் பிளைட்னரின் லூத்தரன் மருத்துவமனையில் செவிலியர் படிப்பில் சேர்ந்தார். பின்னர் கல்வியை முடித்து கொண்டு 1850-ம் ஆண்டு, லண்டனுக்குத் திரும்பி அங்கு அவர் ஒரு மிடில்செக்ஸ் மருத்துவமனையில் நர்சிங் வேலையைப் பெற்றார். அவரது செயல்திறன் அவரது முதலாளியைக் கவர்ந்தது. நைட்டிங்கேல் பணியமர்த்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

நைட்டிங்கேல் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனையில் இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைந்தது. கடின உழைப்பு அவரது உடல்நிலையை பாதித்தது. அவரது நர்சிங் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்கள் வந்த போதும் அவற்றில் இருந்து எல்லாம் அவர் மீண்டு வந்தார். குறிப்பாக ஒட்டோமான் பேரரசைக் கட்டுப்படுத்த ரஷியா சாம்ராஜ்யத்திற்கு எதிராக பிரிட்டிஷ் பேரரசு 1853-ம் ஆண்டு கிரிமியன் போரில் ஈடுபட்டது.

ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் கருங்கடலுக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து 1854-ம் ஆண்டு இந்த போரில் 18 ஆயிரம் வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பெண்கள் செவிலியர்கள் பணி செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து போராடிய நைட்டிங்கேல், 1854-ம் ஆண்டின் பிற்பகுதியில், போர் செயலாளர் சிட்னி ஹெர்பெர்ட்டின் உத்தரவின்படி 34 செவிலியர்களைக் கொண்ட ஒரு குழுவை கூட்டி, கிரிமியாவிற்கு சென்று படுகாயமடைந்த போர் வீரர்களுக்கு விளக்குகள் ஏந்திச் சென்று சிகிச்சை அளித்தார். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொண்டில் சிறந்து விளங்கியதுடன் 'கிரிமியா' போரில் உயிருக்குப் போராடிய பலரின் கண்களுக்கு 'கைவிளக்கு ஏந்திய தேவதை'யாகத் தோன்றினார். இவருடைய சேவையை பாராட்டி 1883-ம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்க விருதும் வழங்கப்பட்டது.

அத்துடன் அவருடைய 84-வது வயதில் இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் மெரிட்' வழங்கப்பட்டன. இவ்வாறாக அவர் வாழ்க்கை முழுவதையும் செவிலியர் பணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து அரிய பல சேவைகளை செய்து 1910-ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அவருடைய மறைவுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந்தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குகளில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராக கைமாற்றப்பட்டு மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகிறது.

சர்வதேச செவிலியர்கள் கவுன்சில்,கடந்த ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்திற்கான கருப்பொருளாக 'உலக ஆரோக்கியத்திற்கு நர்சிங்' என்று அமைத்துள்ளது, கடந்த 2020 ம் ஆண்டை செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாக அறிவித்தது.

குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க சுகாதாரம், கல்வி மற்றும் நலத்துறையின் அதிகாரியான டோரதி சதர்லேண்ட் 1953 ஆம் ஆண்டில் ஜனாதிபதி டுவைட் டி ஐசனோவருக்கு "செவிலியர் தினத்தை" அறிவிக்க முன்மொழிந்தார்; ஆனால் ஜனாதிபதி ஐசனோவர் அவரது கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் சர்வதேச செவிலியர் கவுன்சில் (ஐ.சி.என்) 1965 முதல் இந்த நாளைக் கொண்டாடுகிறது.

ஜனவரி 1974 இல், புளோரன்ஸ் நைட்டிங்கேலின் நினைவாக சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாட மே 12 தேர்வு செய்யப்பட்டது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரில் செவிலியர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். நம் நாட்டில் மட்டும் அல்லாது உலகளவில் மக்களின் ஆரோக்கியத்திற்கு செவிலியர்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளை அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.எங்களது இன்ஸ்டா செய்தி குழுமம் சார்பில் நாங்களும் தெரிவித்து கொள்கிறோம்.

உலகையே முடக்கிப் போட்ட கொரோனாவால், இவர்களது சேவையை முடக்க முடியவில்லை. பெற்ற தாய், தந்தை, உற்றார், உறவினர் என அனைவரையும் நம்மிடம் இருந்து பிரித்த கொரோனாவால், பிரிக்க முடியாத ஒரே உறவு செவிலியர் தான். அப்படி தாயைப் போன்று நோயாளிகளை கவனித்துவரும் செவிலியர்களால் தான் உலகமே தற்போது புத்துயிர் பெற்றுவருகின்றது.

கொரோனா நோயாளிகளைக் கண்டதும் அனைவரும் பயந்து ஓடும் நிலையில், நோயாளிகள் படும் வேதனையை உணர்ந்ததால் தான், அவர்களின் வேதனையைப் போக்க நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றோம் என்கிறார்கள் நம் செவிலியர்கள்.எத்தனையோ இன்னல்களை சந்தித்தாலும், ஒரு தாய் தன் பிள்ளைகளை காப்பது போல செவிலியர்கள் தங்கள் பணியை தொடர்ந்து வருகின்றனர். செவிலியர்களின் தினமான இன்று அவர்களின் சேவையைப் போற்றுவோம்.

International Nurses Day | சர்வதேச செவிலியர்கள் தினம்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!