ஏவுகணை அழிக்கும் கப்பலான ஐஎன்எஸ் மர்மகோவா: நாட்டுக்கு அர்ப்பணிப்பு
மும்பை மஜ்காவ் கப்பல் கட்டும் நிறுவனம் 'திட்டம் 15-பி'-யின் கீழ் விசாகபட்டினம் நாசகார கப்பல்களை தயாரித்து வருகிறது. இதில் அந்த நிறுவனம் 2-வது ஐ.என்.எஸ். 'மர்மகோவா' கப்பல் கட்டும் பணியை சமீபத்தில் முடித்தது.
ஐ.என்.எஸ். 'மர்மகோவா' போர்க்கப்பல் 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்டதாகும். 7 ஆயிரத்து 400 டன் எடை கொண்ட இந்த கப்பல் அதிகபட்சமாக 30 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
மும்பையில் நடந்த விழாவில் மர்மகோவா போர்க்கப்பல் கடற்படைக்கு அர்பணிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் கலந்து கொண்டு போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சௌஹான், கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் பிற உயரதிகாரிகள் முன்னிலையில் ஐஎன்எஸ் மர்மகோவா இயக்கப்பட்டது.
விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ஐ.என்.எஸ். மர்மகோவா, போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இந்தியாவின் திறமைக்கு சான்றாக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்று. இந்திய கடல்சார் திறன்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தும். ஐ.என்.எஸ். மர்மகோவா உள்நாட்டில் தயாரான சக்தி வாய்ந்த போர்க்கப்பல். இதில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்று உள்ளன. இதை கடற்படைக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இந்தியாவின் கடல்சார் வலிமையை அதிகரித்து உள்ளது.
ஐஎன்எஸ் மர்மகோவா வில் உள்ள அமைப்புகள் தற்போதைய தேவைகளை மட்டுமல்ல, எதிர்கால தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். நமது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி திறனுக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு. எதிர்காலத்தில், நாங்கள் உலகிற்கு கப்பல் கட்டும் பணியை செய்வோம். இந்திய பொருளாதாரம் உலகின் முதல் 5 இடங்களுக்குள் வந்து உள்ளது. வல்லுநர்களின் கணிப்பின்படி 2027-க்குள் இந்திய பொருளாதாரம் முதல் 3 இடத்திற்குள் வரும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கடற்படை தளபதி, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu