உற்பத்தி திறன் அதிகரிக்க கண்மூடித்தனமான போட்டி மனிதகுலத்திற்கு தீங்கு: குடியரசுத்தலைவர்
புதுதில்லியில் லக்ஷ்மிபத் சிங்கானியா - ஐஐஎம் லக்னோ தேசிய தலைமைத்துவ விருதுகளைக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 7) வழங்கினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குக் கண்மூடித்தனமான போட்டி மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் சீர்குலைவுகளும் இதன் விளைவாகும். இன்று உலகமே இந்தச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. லாபத்தை அதிகப்படுத்துதல் என்ற கருத்தாக்கம் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் இந்தியக் கலாச்சாரத்தில் இந்தக் கருத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆனால் இந்தியக் கலாச்சாரத்தில் தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இளைஞர்கள் சுயதொழில் கலாச்சாரத்தை பின்பற்றுவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பாக இந்தியா திகழ்கிறது என்று அவர் கூறினார். உலகின் சிறந்த யூனிகார்ன் மையங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நமது நாட்டு இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவுக்கு அப்பாற்பட்டு அவர்களின் நிர்வாகத் திறன் மற்றும் வணிகத் தலைமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இந்திய இளைஞர்கள் தலைமை தாங்குகிறார்கள் என்று அவர் கூறினார்.
நாட்டின் செயல்திறன் மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நமது கல்வி நிறுவனங்களின் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். மேலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் இந்திய மேலாண்மை ஆய்வுகளை இந்திய நிறுவனங்கள், நுகர்வோர் மற்றும் சமூகத்துடன் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வெளிநாடுகளில் அமைந்துள்ள தொழில்கள் குறித்த வழக்கு ஆய்வுகள் மற்றும் கட்டுரைகளுக்குப் பதிலாக, இந்தியாவில் அமைந்துள்ள இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றி வழக்கு ஆய்வுகள் எழுதப்பட்டு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். நமது மேலாண்மை நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி இதழ்களில் தங்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். திறந்த அணுகல் களத்தில் உள்ள, நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அணுகக்கூடிய இந்திய இதழ்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில், உத்தரா கண்டில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து 41 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்ட விதம் பாராட்டப்படுவது மட்டுமல்லாமல், அது குறித்த தலைமைத்துவ ஆய்வுகள் குறித்தும் பேசப்படுகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இது மிகவும் நல்ல மற்றும் உயிரோட்டமான உதாரணம். குறிப்பாக ஒரு நெருக்கடியில் தலைமைத்துவம் மற்றும் கூட்டுச் செயல்பாடு.
செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிய குடியரசுத் தலைவர், செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலை இழப்பு குறித்து பலர் கவலைப்படுகிறார்கள் என்றார். செயற்கை நுண்ணறிவின் அனைத்துப் பரிமாணங்களும் மேலாண்மைக் கல்வியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு தெரிந்தவர் மற்றும் அதை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலை இழப்பு ஏற்படும் என்ற பயம் இருக்கக்கூடாது என்று அவர் கூறினார். ஐஐஎம் லக்னோ போன்ற நிறுவனங்களும் அமிர்த காலத்தில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கை மனதில் கொண்டு பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu