தொழில்முனைவு, கண்டுபிடிப்புகளில் இந்தியா புதிய உச்சம் -குடியரசு துணைத்தலைவர்

தொழில்முனைவு, கண்டுபிடிப்புகளில் இந்தியா புதிய உச்சம் -குடியரசு துணைத்தலைவர்
X

குடியரசு துணைத்தலைவர் எம். வெங்கையா நாயுடு

மாணவர்கள் இடையே தொழில்முனைவையும், புதுமை படைப்பாற்றலையும் தூண்டவேண்டும்- பல்கலைக் கழகங்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

குடியரசு துணைத்தலைவர் எம். வெங்கையா நாயுடு, இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலை உருவாக்குவது அவசியம் என இன்று வலியுறுத்தினார். இதற்கு, கல்வி நிறுவனங்கள் தொழில்துறையுடன் இணைந்து, பருவநிலை மாற்றம், மாசு, சுகாதாரம் மற்றும் வறுமை போன்ற சமகால சவால்களை சமாளிப்பதில்,உரிய பலன்களை அளிக்கக்கூடிய ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரியில் இன்று புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், மற்ற நாடுகளை விட வளர்ந்த நாடுகள் சிறந்து விளங்குவதற்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்வதே காரணம் என குறிப்பிட்டார். நாட்டை வலுவானதாக்கவும், மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்கும், சிந்தனைகளை வெளிக்கொணர்ந்து, சமுதாயத்துக்குப் பொருத்தமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலாவது மாநில பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது. 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியைத் தரம் உயர்த்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள அடல் இன்குபேசன் மையம், மின்னணு வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக தொழில் தொடங்க 15 புதிய தொழில்முனைவோருக்கு ஊக்கமளித்துள்ளதை பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், தொழில்முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியா புதிய உச்சங்களைத் தொட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழல் நாடாக இந்தியா மாறியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், விண்வெளித் துறையை தனியார் பங்களிப்பிற்கு அனுமதித்துள்ளதன் மூலம், ஆற்றல் மிக்க புதிய தொழில்முனைவோர் இத்துறையில் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

ஸ்டார்ட் அப் குழுக்களில் 45% பெண் தொழில்முனைவோரைத் தலைவராகக் கொண்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இந்த ஆரோக்கியமான போக்கு, மேலும் அதிக பெண்கள் தொழில் முனைவோராவதை ஊக்குவிக்கும் என்றார். பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு.நாயுடு, சாதி, மதம், பாலின ரீதியில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். '' அனைத்து விதமான சமுதாய பாகுபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருவதைக் காணும் தலைமுறையினரை நீங்கள் உருவாக்க வேண்டும்'' என்று பல்கலைக்கழக அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

புதிய இந்தியாவின் முக்கிய வலிமை மிகப்பெரிய இளம் மக்கள்தொகை என்று குறிப்பிட்ட அவர், தொழில்முனைவு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மாணவர்கள் இடையே எழுச்சியை கல்வி நிறுவனங்கள் ஊட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன்மூலம், நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் ஆற்றலை இளைஞர்கள் பெறுவார்கள்.

வரையறையை விரிவாக்குதல், விதிமுறைகளை எளிதாக்குதல், வரிச் சலுகைகள் அளித்தல் போன்ற ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு அரசின் நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட அவர், நிதியுதவி வழங்கி, தொழில்முனைவுக்கு ஆதரவு அளித்து ஸ்டார்ட் அப்களை கைதூக்கிவிட தொழில்துறையினர் முன்வரவேண்டும் என வலியுறுத்தினார். ''இந்த திசையில் மேலும் ஊக்கமளிக்க, மேம்பாடான தொழில்துறை-கல்வித்துறை கூட்டாண்மை அதிகரிக்கப்பட வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், பரிசோதனை கருவிகள், குறைந்த விலை வென்டிலேட்டர்களை உருவாக்கியதுடன், விநியோகச்சங்கிலி மற்றும் போக்குவரத்தில் புதுமைகளைப் புகுத்தி, உயிர்களைப்பாதுகாத்த இந்திய ஸ்டார்ட் அப்களை குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார்.

பெருந்தொற்று காலத்தில் கல்வித்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய திரு.நாயுடு, மோசமான காலம் முடிவுக்கு வந்தது, தொற்றுக்கு பிந்தைய மீளுருவாக்கத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம் என்று கூறினார். வகுப்பறைகளில் கற்றுக்கொள்வதற்கு ஆன்லைன் கல்வி ஒரு மாற்றாக முடியாது என்று கூறிய அவர், மாணவர்கள் கூடிய விரைவில் பள்ளிகள், கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாடு முழுவதும் உலகின் மிகப் பெரிய இலவச தடுப்பூசி திட்டம் செயல்பட்டு வருவதைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், தடுப்பூசி தயக்கத்தைப்போக்கி, மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதியில் அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்தியது குறித்து பாராட்டு தெரிவித்த அவர், யூனியன் பிரதேசத்தின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தியதில் கல்லூரி முக்கியப் பங்காற்றியதாக குறிப்பிட்டார்.

மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகத்தைப் பெறும் புதுச்சேரி மக்களை வாழ்த்திய திரு.நாயுடு, சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டு, புதிய பாடங்களை தொடங்குவதற்கான தன்னுரிமை போன்ற பல கூடுதல் வாய்ப்புகள் அதற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தொழில்நுட்பக் கல்வி வரலாற்றில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒரு முக்கிய மைல்கல் என்று அவர் குறிப்பிட்டார்.

மிகப்பெரும் புரட்சிகர யோகியும், தத்துவஞானியும், கவியுமான ஶ்ரீ அரவிந்தரின் கருத்துக்களை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர், கல்வி என்பது வெறும் வாழ்க்கைக்கான தொழில்முறையைப் போதிப்பதோ அல்லது வாழ்வாதார தொழிலை அளிப்பதோ மட்டும் அல்ல என்றும், தாய் நாட்டுக்கு தொண்டாற்ற உறுதி பூணும் ஆற்றலும், ஒழுக்கமும் கொண்ட குடிமக்களை உருவாக்குவதே அதன் முக்கிய நோக்கம் என்றும் கூறினார். ''

உங்களது வருங்கால முயற்சிகளுக்கு வழிகாட்டும் ஒளியாக உங்கள் அனைவருக்கும் இந்த வார்த்தைகள் திகழட்டும்'' என்று பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் கூறினார்.

ஶ்ரீ அரவிந்தர், சுப்பிரமணிய பாரதி, சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்களின் வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றி நமது இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட குடியரசு துணைத்தலைவர், பள்ளி பாடத்திட்டங்களில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உலகம் முழுவதையும் அண்மையில் உலுக்கிய பெரும் காட்டுத்தீ, வெள்ளம், வெயில் போன்ற கடும் வானிலை நிகழ்வுகளை குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், பருவநிலை மாற்றம் பெரும் சவால் என்று கூறினார். இதனைச் சமாளிக்க இயற்கைக்கு மதிப்பளித்து, அதனுடன் இணைந்த நல்லிணக்கமான வாழ்வை மேற்கொள்ள அனைவரும் பாடுபடவேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி, புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம், துணைத்தலைவர் பி.ராஜவேலு, புதுச்சேரி அரசின் அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், ஏ.கே.சாய் சரவணன், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.எல்.கல்யாண சுந்தரம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முதல்வர் டாக்டர் கே. விவேகானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!