அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா?.. உங்களுக்குதான் இந்த எச்சரிக்கை.. தவறாமல் படியுங்கள்..
பைல் படம்
நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் பொதுமக்கள் கணக்கு வைத்து உள்ளனர். அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தின் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அஞ்சல வங்கியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அஞ்சலக வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பணப் பலன்களை எளிதாக பெற முடியும் என்பதால் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், தற்போது, அஞ்சலக சேமிப்புக் கணக்கில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, அஞ்சலக வங்கிகளில் கிராம மக்கள், பழங்குடியினர், கல்வியறிவு இல்லாதவர்களின் பெயர்களில் போலி சேமிப்பு கணக்குகளை தொடங்கி, மோசடி செய்பவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகதவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே, அஞ்சலகங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்களை தெரியாத நபர்களுக்கு பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்தக் கணக்குகள், உண்மையான கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தெரியாமல், பல்வேறு இணையக் குற்றங்களில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என இந்திய அஞ்சலக வங்கி எச்சரித்துள்ளது.
இந்திய அஞ்சலக வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள கூடுதல் அறிவுரைகள் விவரம் வருமாறு:
அஞ்சலகங்களில் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்ணைத் தவிர மூன்றாம் நபரின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தக் கூடாது. பரிவர்த்தனையின் உண்மைத்தன்மையை அறியாமல், எந்தப் பணத்தையும் ஏற்கவோ அல்லது அனுப்பவோ வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் தங்கள் சார்பாக பரிவர்த்தனை செய்வதற்காகத் தங்கள் மொபைல் வங்கி கணக்கு விவரங்களை அறியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் அஞ்சலக வங்கிக் கணக்கு விவரங்களை வேலை வாய்ப்பு தருவதாக கூறும் நபர்களுடன் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
வாடிக்கையாளர்கள் பணத்தை அனுப்புவதற்கு முன்பாகவோ அல்லது பரிவர்த்தனை செய்வதற்கு முன்பாகவோ நிறுவனம் மற்றும் நபர்கள் குறித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அஞ்சலகங்களில் வங்கி கணக்கு துவங்கிய பின் வாடிக்கையாளர்களின் அடையாளத் தரவை அவ்வப்போது அஞ்சலக வங்கி புதுப்பித்து வருகிறது. மேலும், இதுபோன்ற மோசடி செய்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களின் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன என இந்திய அஞ்சலக வங்கி தெரிவித்து உள்ளது.
இதுவரை வங்கிக் கணக்குகளை மட்டுமே குறிவைத்து நடைபெற்று வந்த இணையவழி மோசடிகள் தற்போது, அஞ்சலக வங்கிக் கணக்குகளையும் குறிவைத்துள்ளதால், அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu