ராஜஸ்தானில் இந்தியா-சவுதி அரேபியா கூட்டு ராணுவப் பயிற்சி துவக்கம்

'சதா தான்சீக்' எனும் இந்தியா-சவுதி அரேபியா கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் இன்று தொடங்கியது. இந்தப் பயிற்சியை ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 45 வீரர்களைக் கொண்ட சவுதி அரேபியாவின் ராயல் சவுதி தரைப்படைப் பிரிவினர் இதில் பங்கேற்கின்றனர். 45 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைப்பிரிவில் காவலர் படைப்பிரிவைச் (இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை) சேர்ந்த ஒரு பட்டாலியனும் இதில் பங்கேற்கிறது.
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாம் அத்தியாயத்தின் கீழ் பகுதியளவு பாலைவன நிலப்பரப்பில் கூட்டு நடவடிக்கைகளுக்காக இரு தரப்புப் படையினருக்கும் பயிற்சி அளிப்பதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். இருதரப்பு துருப்புக்களுக்கு இடையே ஒத்துழைப்பு, நல்லிணக்கம், தோழமை ஆகியவற்றை வளர்க்கவும் இது உதவும்.
நடமாடும் வாகன சோதனைச் சாவடி, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை, சோதனை ஒத்திகை, துப்பாக்கி சுடுதல், சறுக்கல் ஆகியவற்றில் இருதரப்பினரும் பயிற்சி மேற்கொள்வர். இந்தப் பயிற்சி இரு தரப்பினருக்கும் தங்களின் பிணைப்பை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். பகிரப்பட்டப் பாதுகாப்பு நோக்கங்களை அடைவதற்கும், பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவை மேம்படுத்துவதற்கும், இரு நட்பு நாடுகளுக்கும் இடையே உறவுகளை வளர்ப்பதற்கும் இது ஒரு தளமாக செயல்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu