இந்தியாவில் சுமார் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கி சேவையின் கீழ் இணைக்கப்படும்: இந்திய அஞ்சல்துறை தகவல்

இந்தியாவில் சுமார் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள்  வங்கி சேவையின் கீழ் இணைக்கப்படும்: இந்திய அஞ்சல்துறை தகவல்
X
2022-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அஞ்சல் துறை தொடர்பாக பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள சில அறிவிப்புகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எண்ணற்ற புதிய சாராம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அஞ்சல் துறை தொடர்பாக பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள சில அறிவிப்புகளை இங்கு காண்போம்.

அஞ்சல் துறையானது பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வண்ணம் சேமிப்பு கணக்கு வகைகளை உருவாக்கி உள்ளடக்க நிதிச்சேவையில் (Financial Inclusion) மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில், குறிப்பாக கிராமப்புற வங்கி சேவையில் அஞ்சல் துறையின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது.

2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த "எந்த நேரமும் எங்கிருந்தும் அஞ்சல் சேமிப்புகள்" என்ற அறிவிப்பானது அஞ்சல் வங்கியை மேலும் மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களையும் மொத்த வங்கி சேவை (Core Banking Solution) வழிமுறையில் உள்ளடக்குவதன் மூலம் கணினி, தொலைபேசி வங்கி சேவை மற்றும் ஏ.டி.எம் வாயிலான பணப்பரிவர்த்தனைகளை இந்தியாவில் எந்த மூலையில் இருந்தும் எளிதில் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தை, இந்தியா முழுமைக்கும் 2022-க்குள் விரிவுபடுத்துவதற்கான பணியானது விரைந்து நடைபெற்று வருகிறது. இதன்மூலம், இந்தியாவில் உள்ள சுமார் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் 100 சதவிகிதம் மொத்த வங்கி சேவை-கீழ் இணைக்கப்படும். இதற்கு, மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பானது, அஞ்சலக மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளோடு இணையவழி பணபரிமாற்றம் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யும்.

மேற்குறிப்பிட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, பட்ஜெட்க்கு பிந்தைய வலைதள கருத்தரங்கம் "Leaving no citizen behind" என்ற தலைப்பில் 23.02.2022 அன்று நடத்தப்பட்டது. மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி துவங்கி வைத்த இக்கருத்தரங்கில், நிதி ஆயோக் வல்லுநர்கள், உயர் அதிகாரிகள், பங்குதாரர்கள், முகவர்கள் மற்றும் அஞ்சலக திட்டங்களோடு தொடர்புடைய பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் இக்கருத்தரங்கை தலைமையேற்று நடத்தினார். அனைத்து அஞ்சல் நிலையங்களையும் 100 சதவிகிதம் மொத்த வங்கி சேவையின் கீழ் இணைப்பது, வங்கிகளோடு அஞ்சலகங்களின் இயங்குதன்மை மற்றும் அதனால் கிராமப்புற ஏழைகளின், குறிப்பாக பெண்களின் வாழ்வில் அதன் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. திரு வினீத் பாண்டே, அஞ்சல் துறை செயலாளர் உரையாற்றுகையில், தபால்காரர்கள் மற்றும் கிராமிய அஞ்சல் பணியாளர்களால் கையாளப்படும் மைக்ரோ ஏடிஎம் சாதனங்கள் மூலம் தொலைவைக் குறைக்கும் வங்கிச் சேவைகள் பொதுமக்களின் வீட்டு வாசலில் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இயங்கக்கூடிய 11,858 அஞ்சல் நிலையங்கள் ஏற்கனவே மொத்த வங்கி சேவையில்(சிபிஎஸ்) இணைக்கப்பட்டு 100 சதவிகிதத்தை பூர்த்தி செய்துள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் அஞ்சலக மற்றும் வங்கிக் கணக்குகளின் இயங்குதள வசதியை வழங்குவதற்கான பணிகள் தொடங்க ஆயத்தமாகும். இவ்வசதி நடைமுறைப்படுத்தப்பட்டால், அஞ்சலக சேமிப்பு கணக்கிலுருந்து எந்த ஒரு வங்கிக்கணக்கிற்கும், வங்கியிலிருந்து அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கும் பணபரிமாற்றம் செய்ய இயலும். குறிப்பாக, கிராமப்புறத்திலுள்ள விவசாயிகளும், மூத்த குடிமக்களும் இதன் மூலம் பெரிதும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மொத்தமுள்ள 11,858 அஞ்சல் நிலையங்களில் 10,260 அஞ்சல் நிலையங்கள் கிராமப்புறத்திலும், 1598 அஞ்சல் நிலையங்கள் நகர்ப்புறத்திலும் செயல்பாட்டில் உள்ளன. 2020-ம் ஆண்டிலிருந்து அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதாச்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லையென்றாலும், வாடிக்கையாளர்கள் அஞ்சலக சேமிப்பு கணக்குகளை துவங்குவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 2.75 கோடி அஞ்சலக சேமிப்பு கணக்குகள் நடப்பில் உள்ளன. இந்த நிதியாண்டில், ஜனவரி வரை மட்டும் கிட்டத்தட்ட 27.86 லட்சம் புதிய கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. செல்வமகள் சேமிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 26.11 லட்சம் கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்திய அளவில் 2-ம் இடத்தில் உள்ளது. சிறப்பான பல நல்ல சேமிப்பு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வரும் அஞ்சல் துறையானது இந்த பட்ஜெட் அறிவிப்பின் மூலம் நிறைய வாடிக்கையாளர்களை கவர்ந்து, புதிய இலக்கை வெகுவிரைவில் அடையும் என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!