லடாக் எல்லையில் பதற்றம் தணிக்க இந்தியா -சீனா அதிகாரிகள் பேச்சுவார்த்தை

லடாக் எல்லையில் பதற்றம் தணிக்க இந்தியா -சீனா அதிகாரிகள் பேச்சுவார்த்தை

லடாக் எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர்கள்.

லடாக் எல்லையில் பதற்றம் தணிக்க இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தியா-சீனாவின் எல்லை பகுதியான கிழக்கு லடாக்கில் அமைதியை உறுதி செய்ய இரு நாடுகளும் முயன்று வருகின்றன. இது தொடர்பாக கடந்த 19ம் தேதி இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாட்டு எல்லைப்பகுதியிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த மேதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. இதனையடுத்து பதற்றத்தை தணிக்க இரு தரப்பிலும் கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான 3,488 கிமீ உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) முழுவதும் ஹெலிபேடுகள், பதுங்கு குழிகள், ஏவுகணை நிலைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற புதிய இராணுவ உள்கட்டமைப்பை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. ஏற்கெனவே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனாவின் நடவடிக்கை இந்தியாவை கடுப்பாக்கியது. எனவே, கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சு வார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தை இப்படியே நீடித்து வந்த நிலையில் 12 மற்றும் 16ம் சுற்று பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஓரளவு ஒத்த கருத்துக்களை முன்வைத்தன. அதாவது, 12ம் கட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதியிலிருந்து பின்வாங்கப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி பின்வாங்கவும்பட்டன. 13லிருந்து 15ம் கட்ட பேச்சுவார்த்தை வரையில், ஹாட் ஸ்பிரிங் பகுதியிலிருக்கும் மீதமுள்ள படைகளையும் பின்வாங்குவதுதான் பதற்றத்தை நிலையாக தவிர்க்கும் என்று இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் சீனா ஒத்துழைக்காததால், இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இறுதியாக 16வது கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரிடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இந்தியாவும் சீனாவும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

இருப்பினும் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பதற்றத்தை தணிக்க மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக கடந்த 19ம் தேதி 21வது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் லெவல் பேச்சுவார்த்தை சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடைபெற்றது. இதில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் நிரந்தர அமைதிக்கான வழிமுறைகள் குறித்து இரு நாடுகளும் தங்கள் யோசனைகளை முன்வைத்தன. ஆனால் இதில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. எனவே 22வது சுற்று பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று ராணுவ துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

Tags

Next Story