இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 400 பில்லியன் டாலர்களைத் தாண்டும்: பியூஷ் கோயல்

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி  400 பில்லியன் டாலர்களைத் தாண்டும்: பியூஷ் கோயல்
X

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி சுமார் 390 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் நிச்சயமாக 400 பில்லியன் டாலர்களைத் தாண்டும்: பியூஷ் கோயல்

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி மார்ச் 14-ம் தேதி வரை சுமார் 390 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்றும், நடப்பு நிதியாண்டில் நிச்சயமாக 400 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்றும் மத்திய வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏசிஎம்ஏ) புது தில்லியில் ஏற்பாடு செய்த தற்சார்பு சிறப்பு விருதுகள் மற்றும் 7-வது தொழில்நுட்ப உச்சி மாநாடு 2022-ல் உரையாற்றிய அவர், இந்தியாவின் வாகன உதிரிபாகங்கள் துறை முதன்முறையாக 600 மில்லியன் டாலர் வர்த்தக உபரியைப் பதிவு செய்துள்ளதாக கூறினார்.

இந்தியாவின் வாகனத் தொழில்துறை 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்புடையது என்பதோடு நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 8% பங்களிப்புடன் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% பங்களிப்பையும் வழங்குகிறது. மேலும், 2025-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய வாகன உற்பத்தித் தொழிலாக மாற உள்ளது.

கோவிட்-19 சவால்கள், கொள்கலன் தட்டுப்பாடு, சிப் பற்றாக்குறை, பொருட்களின் விலைகள் ஏற்றம் மற்றும் இதர சிக்கல்களுக்கிடையே வாகனத் தொழில்துறையை வளர்ச்சியடைய வைத்த வீரர்களை அமைச்சர் பாராட்டினார். சிப் தட்டுப்பாடு தொடர்பான வாகனத் துறையின் கவலைகளை அரசாங்கம் உணர்ந்துள்ளது என்று திரு கோயல் கூறினார். 76,000 கோடி பட்ஜெட்டில் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட செமிகான் இந்தியா திட்டம், இறக்குமதி சார்பைக் குறைக்கவும், சிப் துறையில் தற்சார்படையவும் உதவும், என்றார் அவர். துடிப்பான அரசும் சுறுசுறுப்பான தொழில்துறையும் கூட்டாக இணைந்து செயல்படுவதால் உலகெங்கிலும் உள்ள சந்தைகளைக் கைப்பற்ற முடியும் என்று அவர் கூறினார்.

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் இந்தியாவின் திறன்களை எடுத்துரைத்த அமைச்சர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை அதிக அளவில் பயன்படுத்துமாறு வாகன உற்பத்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!