ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
பைல் படம்
ரயில் விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களில் சிக்கி இறந்தப் பயணிகளின் வாரிசுகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரயில்வே அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.
ரயில்வே சட்டம், 1989, பிரிவு 124 மற்றும் 124-ஏ-ன் கீழ் வரையறுக்கப்பட்டபடி ரயில் விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களில் இறந்தப் பயணிகளின் வாரிசுகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும், ஆட்களால் பராமரிக்கப்படும் லெவல் கிராசிங் கேட் விபத்தில் ரயில்வேயின் பூர்வாங்கப் பொறுப்பு இருக்குமானால், விபத்தில் சிக்கிய சாலைப் பயனர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குக் கருணைத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
அசம்பாவித சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
ஆட்களால் பராமரிக்கப்படும் லெவல் கிராசிங் கேட் விபத்தில் ரயில்வேயின் பூர்வாங்கப் பொறுப்பு இருக்குமானால், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சாலைப் பயனரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
ரயில் விபத்தில் கடுமையாக காயமடைந்தப் பயணிகள் 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம், 10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும் நாள் வரை கருணைத் தொகை வழங்கப்படும். அசம்பாவித சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் 6 மாதங்கள் வரை அல்லது சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்லும் நாள் வரை நாள் ஒன்றுக்கு ரூ.1500 வீதம் 10 நாட்களுக்கு ஒரு முறை விடுவிக்கப்படும்.
தொடக்க நிலை செலவுகளுக்காக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கமாக வழங்கப்படும். எஞ்சிய தொகை கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டும் வழங்கும் வகையிலான காசோலையாக அளிக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu