தில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் வருமான வரித்துறை சோதனை

முக்கிய ஆவணங்கள், தாள்கள், குறிப்புகள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவை தேடுதல் நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டுள்ளன.

தில்லி, பஞ்சாப் மற்றும் கொல்கத்தாவில் பெருநிறுவன அலுவலகங்களைக் கொண்டுள்ள ஜவுளி மற்றும் நூல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி வணிக நிறுவனத்தில் வருமான வரித்துறை 2021 செப்டம்பர் 18 அன்று சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

பல்வேறு முக்கிய ஆவணங்கள், தாள்கள், குறிப்புகள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவை தேடுதல் நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டுள்ளன. அவை கணக்கில் வராத நிதியை இந்திய நிறுவனங்கள் மூலம் திரும்பக் கொண்டு வருதல், துறைக்கு தெரிவிக்கப்படாத வெளிநாட்டு வங்கி கணக்குகள் தொடர்பானவை ஆகும். கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகள், நில ஒப்பந்தங்களில் பணப் பரிவர்த்தனைகள், கணக்குப் புத்தகங்களில் போலிச் செலவுகள், கணக்கில் வராத பணச்செலவுகள், தங்குமிடப் பதிவுகள் தொடர்பான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.350 கோடியை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இந்தக் குழுமம் வைத்திருந்ததும், போலி நிறுவனங்கள் மூலம் அந்த நிதியை தனது தொழில்களுக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத நிதியை நிர்வகிப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் கட்டணம் செலுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டப்படாத தனிப்பட்ட செலவு தொடர்பான விவரங்களும் கண்டறியப்பட்டன. போலிச் செலவுகள் மற்றும் நில ஒப்பந்தங்களில் பணப் பரிவர்த்தனைகள் பற்று வைப்பதன் மூலம் ரூ.100 கோடி பணமாக வைத்திருந்ததற்கான ஆதாரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கையும் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!