பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல் !
மத்திய அமைச்சகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கொவிட் மேலாண்மைக்கு வழங்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பல மாநிலங்களில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும், கொவிட் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், மாநிலங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு முழு அணுகுமுறையுடன் செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கொவிட் நிலவரத்தை கையாளவும், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கவும், மத்திய அரசின் பல அமைச்சகங்கள், உயர்நிலைக் குழுக்கள், மத்திய செயலாளர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
நாடு முழுவதும் கொவிட்-19 மேலாண்மைக்கு, மருத்துவமனை கட்டமைப்புகளை அதிகரிக்க, மத்திய அமைச்சகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் கடந்தாண்டு ஏற்படுத்தியது போல் கொவிட் பிரத்யேக வார்டுகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த பிரத்யேக வார்டுகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், நாடு முழுவதும் கொவிட் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதால், கடந்தாண்டு எடுத்த உதவி நடவடிக்கை போல், அனைத்து மத்திய அமைச்சகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துமனைகளில், தற்போது மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்க, இந்த கொவிட் பிரத்யேக மருத்துவமனை வார்டுகள் குறித்த விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அமைச்சகமும் சிறப்பு அதிகாரியை நியமித்துக் கொள்ளலாம் எனவும் அவர்களின் தொடர்பு விவரங்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu