வடமாநிலங்களை வறுத்தெடுக்கப் போகும் வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடமாநிலங்களை வறுத்தெடுக்கப் போகும் வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
X
இனிவரும் நாட்களில் வடமாநிலங்களில் வெயில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தென் மற்றும் வட மாநிலங்களில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு சில மாநிலங்களில் மார்ச் மாதத்தில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெயிலின் தாக்கம் குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,

இனிவரும் அடுத்த நான்கு நாட்களில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த சில தினங்களுக்கு வெயில் கொளுத்தும். குறிப்பிட்ட வடமாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மேகாலயா,மிசோரம். திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த ஐந்து தினங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது.

இதேபோன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!