வெளிநாட்டில் இருக்கும்போது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதா? பதறாதீங்க
இந்திய அரசு பாஸ்போர்ட்
நீங்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போது உங்கள் தொலைபேசி, பணப்பை அல்லது பாஸ்போர்ட்டை இழப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. அதுவும் பாஸ்போர்ட் தொலைந்துபோனால் அது மிகப்பெரிய சிக்கலில் கொண்டு சேர்க்கும்.
வெளிநாட்டு பயணத்தின் போது நீங்கள் எடுத்துச் செல்லும் மிக முக்கியமான ஆவணம் பாஸ்போர்ட் ஆகும். நீங்கள் ஒரு இந்தியக் குடிமகன் என்பதை வெளிநாட்டு அதிகாரிகளுக்கு உறுதிப்படுத்தும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஆவணம் இது.
பாஸ்போர்ட் தொலைந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் அல்லது இந்திய மிஷனிடம் தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால், பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குமாறு விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டில் பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகள்
காவல்நிலையத்தில் புகாரை பதிவு செய்யவும்
உங்கள் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டது என்பது தெரிந்தவுடன், உடனேஅருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டும்.
புகார் அளித்ததற்கான அறிக்கையின் நகலை கண்டிப்பாக வாங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து போனதற்கு சான்றாக செயல்படுகிறது. மேலும், புதிய பாஸ்போர்ட் அல்லது அவசரச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது போன்ற தூதரகம் தொடர்பான நடைமுறைகளுக்கு காவல்துறையினரின் புகார் அறிக்கை ஒப்புகை உங்களுக்கு உதவும்.
அருகில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும்
அடுத்த முக்கியமான செயல், அருகிலுள்ள இந்திய தூதரகத்திற்கு செல்வதோ அல்லது தொடர்புகொள்வதோ முக்கியமானது. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் அல்லது பாஸ்போர்ட் தொலைந்தது போன்ற ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இந்திய குடிமக்களுக்கு உதவ வெளிநாட்டில் இந்திய தூதரகங்கள் உள்ளன.
புதிய பாஸ்போர்ட் அல்லது அவசரச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவும்
உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன: புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அவசரகாலச் சான்றிதழைப் பெறலாம்.
புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் முடிவு செய்தால், புதிய பாஸ்போர்ட்டைப் பெற குறைந்தபட்சம் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.
டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்க மாட்டார்கள். ஆனாலும் வேறு பாஸ்போர்ட் எண்களைக் கொண்ட புதிய பாஸ்போர்ட் புதிய செல்லுபடியாகும் தன்மையுடன் வழங்கப்படும்.
புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- தற்போதைய முகவரிக்கான சான்று
- பிறந்த தேதிக்கான சான்று
- பாஸ்போர்ட் எப்படி, எங்கு தொலைந்தது / காணாமல் போனது என்பதைக் குறிப்பிடும் உறுதிமொழி (இணைப்பு 'எஃப்')
- அசல் காவல்துறை அறிக்கை
- பழைய பாஸ்போர்ட்டின் (குடியேற்ற சோதனை) ECR/ECR அல்லாத பக்கம் இருந்தால், முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல்.
- அசல் எமர்ஜென்சி சர்டிபிகேட்
உங்கள் தொலைந்து போன/சேதமடைந்த/திருடப்பட்ட பழைய பாஸ்போர்ட்டின் நகல் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய ஆவணம் அல்ல. ஆனால் பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது, பாஸ்போர்ட் எண், வழங்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி மற்றும் வழங்கப்பட்ட இடம் போன்ற முந்தைய பாஸ்போர்ட் விவரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு வாரம் காத்திருக்க முடியாவிட்டால், அவசரச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவும். பாஸ்போர்ட்டை இழந்த இந்தியக் குடிமகன் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான பயணத்தை அங்கீகரிக்க இந்த பயண ஆவணத்தை ஒருமுறை பயன்படுத்தலாம்.
அவசரச் சான்றிதழுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- இழந்த பாஸ்போர்ட்டின் நகல் (இருபுறமும்)
- காவல்துறை அறிக்கையின் நகல்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
- EAP-2 படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பம்
- நீங்கள் எந்த விருப்பத்தை தேர்வு செய்தாலும், உங்கள் விசாவை மீண்டும் முத்திரையிட வேண்டும்.
விசாவை மீண்டும் வழங்குவதற்கு விண்ணப்பிக்கவும்
வெளிநாட்டில் பயணம் செய்யும் போது உங்கள் பாஸ்போர்ட்டை இழந்தால், உங்களிடம் இருக்கும் விசா காலத்தயும் இழக்க நேரிடும். உங்கள் விசாவை வழங்கிய அந்தந்த நாட்டின் தூதரகத்திற்குச் சென்று உங்கள் விசாவைத் திரும்பப் பெறலாம். அதற்கு உங்களுடைய பழைய விசாவின் நகல் மற்றும் பதிவு செய்யப்பட்ட காவல்துறை அறிக்கை உங்களுக்குத் தேவைப்படும்.
உங்கள் புதிய மாற்று பாஸ்போர்ட் மற்றும்/அல்லது அவசரச் சான்றிதழும் தேவைப்படும்.
விமானத்தை பிடிக்க திட்டமிடுங்கள் மற்றும் பயணக் காப்பீட்டைக் கோருங்கள்
மேலே உள்ள வழிமுறைகளை செய்வதற்கும் உங்கள் பயண ஆவணங்களைப் பெறுவதற்கும் உங்களுக்கு போதுமான நேரம் இல்லையென்றால், நீங்கள் திட்டமிடப்பட்டபடி விமானத்தைப் பிடிப்பது சாத்தியமற்றதாக இருக்கலாம். எனவே வேறு மாற்று வழிகளைச் சரிபார்த்து, சாத்தியமான மாற்று ஏற்பாடுகளுக்கு விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.
அனைத்து விசாக்களுக்கும் பயணக் காப்பீடு கட்டாயமில்லை என்றாலும், உங்கள் பயணத்தின் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது.
உங்கள் பாஸ்போர்ட்டை நீங்கள் தொலைத்துவிட்டால், உங்கள் பயணக் காப்பீட்டு வழங்குநரைத் தொடர்புகொண்டு, இது குறித்து அவர்களிடம் சொல்லுங்கள். பாஸ்போர்ட் தொலைந்ததால் ஏற்படும் செலவுகள் தொடர்பான காவல்துறை அறிக்கை மற்றும் ரசீதுகளை கையில் வைத்திருக்கவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu