மக்களவை தேர்தல் 2024: வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்?
தேர்தல் செலவுகள் - காட்சி படம்
நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது. தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முக்கியப் பொறுப்புகளில், கட்சிகள் மற்றும் தனிப்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதும் அடங்கும்.
கட்சிகள் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற வரம்பு இல்லை என்றாலும், வேட்பாளர்களுக்கு அந்த வரம்பு உள்ளது. 1951-52 நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், மக்களவை வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.25,000 மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ரூ.10,000 மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அது பன்மடங்கு உயர்ந்துள்ளது.
வேட்பாளர்கள் மக்களவைத் தொகுதிகளுக்கு ரூ.95 லட்சமும், சட்டமன்றத் தொகுதிகளுக்கு ரூ.40 லட்சமும் மட்டுமே அதிகபட்சமாக செலவு செய்ய முடியும். சில சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை தொகுதிக்கு 75 லட்ச ரூபாயும், சட்டமன்ற தொகுதிகளுக்கு ரூ.28 லட்சமும் ஒரு வேட்பாளர் செலவு செய்யலாம்.
வேட்பாளர்களுக்கான செலவு வரம்பு என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் மக்களவை தொகுதி வேட்பாளர்களுக்கு ரூ.70 லட்சமாகவும், சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ரூ.28 லட்சமாகவும் செலவு வரம்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு குறிப்பிட்ட தொகுதி மற்றும் மொத்தமாக தேர்தல்களின் போது ஒரு கட்சி செலவிடும் தொகைக்கு எந்த வரம்பும் இல்லை. ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பேரணிகள் அல்லது நிகழ்வுகளுக்கு செய்யப்படும் செலவு கட்சி செலவாக கருதப்படுகிறது.
உதாரணமாக, பிரதமர் பதவியில் இருப்பவர் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பேரணி நடத்தினால், அது வேட்பாளர் செய்த செலவாக கருதப்படாது. கட்சி சார்பாக செய்யப்படும் செலவாகவே கருதப்படும்.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்கின்றனர் என்பதே பரவலாக நிலவும் குற்றச்சாட்டாகும். உதாரணமாக கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் சேர்து, சுமார் 55,000-60,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, ஊடக ஆய்வுகள் மையம் தெரிவித்துள்ளது. இது 2014 தேர்தலில் செலவிடப்பட்ட தொகையை விட இருமடங்கு மற்றும் 1999 தேர்தல்களின் போது செலவிடப்பட்ட தொகையை விட ஆறு மடங்கு அதிகம் ஆகும்.
அதாவது ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடிக்கும், ஒரு வாக்காளருக்கு ரூ.700க்கும் அதிகமாகவும் செலவு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், சராசரியாக, ஒவ்வொரு தொகுதியிலும் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், அதாவது கட்சிகளும் வேட்பாளர்களும் சேர்ந்து ஒரு தொகுதியில் சராசரியாக 7 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். இந்நிலையில், 2024ம் ஆண்டு தேர்தல் செலவுகள் 2019ம் ஆண்டு ஆனதை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கூட்டங்கள், பேரணிகள், விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவை, தேர்தல் பரப்புரைக்கான ஒரு வேட்பாளரின் சட்டப்பூர்வ செலவாக கருதப்படுகிறது. அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் தங்கள் செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
அதைதொடர்ந்து, மக்களவைத் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் விரிவான தேர்தல் செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu