புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்
செங்கோல்
புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மே 28-ம் தேதி திறக்கப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் `செங்கோல்' நிறுவப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அரசிடம் செங்கோல் வழங்குவது சோழர்களின் மரபில் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரம் இந்தியாவுக்கு கைமாறுவதை குறிக்கும் வகையில், 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு முன்னாள் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
இந்த `செங்கோல்' என்ற வார்த்தை நீதி எனும் பொருள்படும். `செம்மை' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்தது. செங்கோலின் வரலாறு, முக்கியத்துவம் பலருக்குத் தெரியாது. தமிழ்நாட்டின் சோழர்களின் பாரம்பரிய மரபை, புதிய நாடாளுமன்றத்தில் நிறுவது, கலாசார பாரம்பர்யங்களை நமது நவீனத்துவத்துடன் இணைக்கும் முயற்சியாகும். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் திட்டம் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. செங்கோல் இப்போது அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
அங்கிருந்து செங்கோல் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும். செங்கோல் நிறுவுவதை அரசியலுடன் இணைக்க வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன். நிர்வாகம் சட்டத்தின் ஆட்சியில் இயங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே இது எப்போதும் எங்களுக்கு நினைவூட்டும். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது வரலாற்றின் மறக்கப்பட்ட அத்தியாயத்தின் கவனத்தை ஈர்க்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்க இருக்கும் நேருவிடம் அப்போதைய வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் பிரபு, இந்தியா சுதந்திரம் அடையும்போது ஆட்சி பரிமாற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுத்தப்போவது என்ன என்று கேள்வி எழுப்பினார். நேரு நாட்டின் கடைசி கவர்னராக இருந்த ராஜாஜியிடம் இது குறித்து ஆலோசனை கேட்க, அவரோ புதிய அரசன் அரசை ஏற்கும் நாளன்று அவையின் ராஜகுரு செங்கோல் ஒன்றை அவருக்கு கொடுப்பார். இது அதிகாரப் பரிமாற்றத்தைக் கொடுக்கும் எனக் கூறியுள்ளார். சோழர்களின் ஆட்சியில் இந்த பாரம்பரியம் பின்பற்றப்பட்டது என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியா சுதந்திரம் அடைகிறது. அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து இருந்து பிரதமருக்கு மாறுகிறது என்பதைக் குறிக்க செங்கோல் ஏற்பாடு செய்யும் பொறுப்பு ராஜாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராஜாஜி இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார். அப்போது மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் இதை ஏற்றுக்கொண்டார். செங்கோல் தயாரானது. இதன் பின் அந்த செங்கோல் அன்றைய சென்னையிலிருந்த நகைக் கடைக்காரரான வும்மிடி பங்காரு செட்டி என்பவரால் செய்யப்பட்டது. இது ஐந்தடி நீளம் கொண்டது. இதன் தலைப்பகுதியில் நீதியைக் குறிக்கும் 'நந்தி' காளையும் இடம்பெற்றுள்ளது.
தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை, 1947 ஆகஸ்ட் 15 அன்று இரவு தம்பிரான் பண்டார சுவாமிகள் மவுண்ட்பேட்டனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இதன் பின் செங்கோலுக்கு பூஜை செய்து செங்கோலை நேருவிடம் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu