கோர்ட் உத்தரவு படி வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு

கோர்ட் உத்தரவு படி வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு
X

ஞானவாபி மசூதி வளாகத்தில் பூஜைகள் நடத்தப்பட்ட காட்சி.

கோர்ட் உத்தரவு படி வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு நிகழ்ச்சிகளை தொடங்கினார்கள்.

வாரணாசி நீதிமன்றம் போட்ட உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் இன்று பூஜையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் இந்துக்கள் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் ஞானவாபி மசூதி அருகருகே உள்ளது. இந்த மசூதியின் சுவரில் உள்ள இந்து கடவுள்களை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மசூதி வளாகத்தில் கோவில் சிவலிங்கம் இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் மிகப்பெரிய கோவில் இருந்ததற்கான சான்று இருப்பதாகவும், மசூதியில் உள்ள தூண்கள் கோவிலில் பயன்படுத்தப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை தொடர்ந்து ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும் 7 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் பூஜை, வழிபாடுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து இன்று ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் பூஜை செய்து வழிபட தொடங்கினர். இன்று காலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தியும், மதியம் 12 மணிக்கு போக் ஆரத்தியும் நடத்தப்பட்டதாக வழக்கில் இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தினமும் ஞானவாபியில் 5 ஆரத்திகள் நடக்கும். காலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தி, மதியம் 12 மணிக்கு போக் ஆரத்தி, மாலை 4 மிணக்கு அப்ரான்ஹா ஆரத்தி, இரவு 7 மணிக்கு சன்கால் ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு சயான் ஆரத்தி நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தான் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக இஸ்லாமியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞானவாபியில் பாதுகாப்பு காரணங்களாக துணை ராணுவம், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture