கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 3 தமிழர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்.
கேதார்நாத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருட் செட்டி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஃபாட்டாவில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், உத்தரகாண்ட் மாநிலத்தின் கருட் செட்டி அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்றவர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நிர்வாகக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆர்யன் ஏவியேஷன் பெல்-407 ஹெலிகாப்டர் VT-RPN 5 பேக்ஸுடன் கேதார்நாத் தாமில் இருந்து இன்று குப்தகாசிக்கு புறப்பட்டது. கருட் சட்டி மீது மேகமூட்டமான வானிலை காரணமாக அங்குள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பலத்த சத்தத்துடன் ஹெலிகாப்டர் தீப்பிடித்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரில் சென்னையை சேர்ந்த பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் பைலட் அனில் சிங்கும் உயிரிழந்தார். இந்த விபத்திற்கு முன் தனது மனைவியுடன் பேசிய அனில் சிங், "என் மகளை கவனித்துக்கொள். அவள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள்," கடைசியாக பேசியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
57 வயதான அவர் மும்பையின் அந்தேரி புறநகரில் ஒரு ஆடம்பரமான வீட்டுவசதி சங்கத்தில் வசித்து வந்தார், அவருக்கு மனைவி ஷிரீன் ஆனந்திதா மற்றும் மகள் ஃபிரோசா சிங் உள்ளனர்.
இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் தெரிவிக்கையில், உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒரு பைலட் மற்றும் 7 பேர் உயிரிழந்ததாக முதல்வரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பத்தினரை பற்றியே உள்ளன'' என தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இன்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலா ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன், சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu