இமாச்சலில் தொடரும் கனமழை, 3 நாட்களில் 71 பேர் உயிரிழப்பு: மீட்பு பணியில் ராணுவம்

இமாச்சலில் தொடரும் கனமழை, 3 நாட்களில் 71 பேர் உயிரிழப்பு: மீட்பு பணியில் ராணுவம்
X

கனமழை காரணமாக இமாச்சலில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு 

இமாச்சலபிரதேசத்தில் கனமழைக்கு 3 நாட்களில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இமயமலையில் அமைந்துள்ள இமாச்சலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. கடந்த சில நாட்களாக இமாச்சலபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டும் இன்றி அங்கு அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழையும் கொட்டுகிறது.

கடந்த திங்கட்கிழமை தலைநகர் சிம்லாவில் உள்ள சம்மர்ஹில் மற்றும் பாக்லி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவில் இடிந்து விழுந்தது. அதே போல் பாக்லி பகுதியில் பல வீடுகள் மண்ணோடு புதைந்தன.

இரு பகுதிகளிலும் இடிபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சம்மர்ஹில் பகுதியில் கோவில் இடிபாடுகளில் இருந்து இதுவரை 13 உடல்களும், பாக்லி பகுதியில் வீடுகளின் இடிபாடுகளில் இருந்து 7 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் வேளையில் அங்கு தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அதுமட்டும் இன்றி கனமழையின் காரணமாக இமாச்சலபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் தொடர் கனமழையால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .

இதனிடையே மாநிலத்தில் இன்னும் சில தினங்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டது.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "இமாசலபிரதேசத்தில் இந்த பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நிலச்சரிவுகளால் 9,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. கனமழையால் 800-க்கும் அதிகமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இமாச்சலபிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தலைநகர் சிம்லாவில் மீட்பு பணிகளுக்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. கனமழையால் மாநிலத்துக்கு இதுவரை ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் உள்கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்துவதற்கு ஓர் ஆண்டு ஆகும்" என கூறினார்.

Tags

Next Story