அரைநிர்வாண எஸ்.ஐ., மசாஜ் செய்த பெண்: பீகார் காவல் நிலையத்தில் நடந்த அவலம்
பீகார் மாநிலம் சகர்ஷா மாவட்டத்தில் தஹர் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த தன் மகனை விடுவிக்கும்படி மகனின் தாயார், ஜாமீன் கேட்டு காவல்நிலையம் வந்துள்ளார். அப்போது அந்த காவல்நிலைய எஸ்.ஐ சின்ஹா உன் மகனுக்கு ஜாமீன் வேண்டுமென்றால் எனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். "உடம்பு ஒரே வலியாக இருக்கிறது, கொஞ்சம் உடம்பை பிடித்துவிடு!' என்று சொல்லி கடுகு எண்ணெய்யை அந்தப் பெண்ணிடம் கொடுத்து மசாஜ் செய்ய சொல்லியுள்ளார்.
மேலும் காவல் உதவி ஆய்வாளர் சின்ஹா தனது சட்டை மற்றும் பனியனை கழற்றிவிட்டு துண்டு ஒன்றை மட்டும் கட்டிக்கொண்டு மசாஜ் செய்யும்படி கேட்டிருக்கிறார். தன் மகனை வெளியில் விடவேண்டும் என்பதற்காக, வேறு வழியின்றி அப்பெண்ணும் போலிஸாருக்கு மசாஜ் செய்திருக்கிறார். எண்ணெய் ஊற்றி அவருக்கு மசாஜ் செய்யும் காட்சியும், அருகில் வேறு ஒரு பெண் அமர்ந்திருக்கும் காட்சியும் அங்கிருந்த யாரோ வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலான அந்த 33 நொடி வீடியோவில் பெண் ஒருவர், மேல் ஆடை ஏதும் இன்றி காவல்நிலையத்தில் அமர்ந்திருக்கும் சஷிபூஷனுக்கு மசாஜ் செய்வது இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் சஷிபூஷன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், அந்தப் பெண் மசாஜ் செய்துகொண்டிருந்த போது எஸ்.ஐ சின்ஹா வழக்கறிஞர் ஒருவருடன், பெண்ணின் மகனுக்கு ஜாமீன் ஏற்பாடு செய்யும்படி போனில் பேசுகிறார். ஏழை என்பதால் அவர்களால் பணம் கொடுக்க முடியாது என்றும் அதனால் ஜாமீனுக்கு தேவையான 10 ஆயிரம் ரூபாயைத் தானே கொடுப்பதாகவும் அவர் பேசுகிறார். மேலும் இரண்டு பெண்களை அனுப்பி வைப்பதாகவும், அவர்களிடம் ஜாமீனுக்குத் தேவையான ஆவணங்களை வாங்கிக்கொள்ளும்படி வழக்கறிஞரிடம் போனில் தெரிவிக்கிறார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, உடனே சின்ஹா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லிபி சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சின்ஹா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu