/* */

விளையாட்டு திடல் தீ விபத்து பற்றி குஜராத் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை

விளையாட்டு திடல் தீ விபத்து பற்றி குஜராத் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

HIGHLIGHTS

விளையாட்டு திடல் தீ விபத்து பற்றி குஜராத் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை
X

ராஜ்கோட்  விளையாட்டு திடல் தீ விபத்து  எரிந்த காட்சி.

குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணையை மேற்கொள்ள இருக்கிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் சிறார்கள் பொழுதுபோக்கு விளையாட்டு திடல் அமைந்திருக்கிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இங்கு குவிந்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் விளையாட்டு திடலின் கட்டுமானம் சரிந்தது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. தற்போது வரை 27 சடலங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தீயில் உடல்கள் முழுமையாக எரிந்துவிட்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த திடலுக்கு வந்த மற்றொரு சிறுவனை காணவில்லை. அவரது சடலமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக விளையாட்டு திடல் மேலாளர் நிதின் ஜெயின் மற்றும் பங்குதாரர் யுவராஜ் சிங் சோலங்கி என இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விபத்து குறித்து பேசிய ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவ், “சனிக்கிழமை பிற்பகலில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எங்களால் முடிந்த அளவுக்கு சீக்கிரமாக தீயை கட்டுப்படுத்தினோம். ஆனால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியவில்லை. உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

இந்த விபத்தையடுத்து குஜராத் முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகள் விளையாட்டு திடல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அம்மாநில டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மட்டுமல்லாது தீ தடுப்பான்கள், என்ஓசி சான்று இல்லாத அனைத்து திடல்களையும் உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். தீ விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல, “ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனையை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகம் முழு வீச்சில் பணியாற்றி வருகிறது” என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை மேற்கொள்ள இருக்கிறது. நாளை இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 May 2024 1:52 PM GMT

Related News