ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.72 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவில் ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்கு சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் இருந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கு பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்தது.
இந்நிலையில் ஜனவரி 2024-ல் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூல் ரூ. 1,72,129 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஜனவரி 2023-ல் வசூலிக்கப்பட்ட ரூ. 1,55,922 கோடி வருவாயைக் காட்டிலும் 10.4 சதவீதம் அதிக வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.
மேலும் இது, இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூலாகும். இந்த நிதியாண்டில் மூன்றாவது மாதமாக ரூ. 1.70 லட்சம் கோடி அல்லது அதற்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.எஸ்.டி. வசூலில் இருந்து சி.ஜி.எஸ்.டி.க்கு ரூ. 43,552 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி.க்கு ரூ. 37,257 கோடியும் அரசு செட்டில் செய்துள்ளதாக நிதி அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 2023 - ஜனவரி 2024 காலகட்டத்தில், ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வசூல் ஆண்டுக்கு ஆண்டு 11.6 சதவீத வளர்ச்சியைக் கண்டது (31.01.2024 மாலை 05:00 மணி வரை), முந்தைய ஆண்டின் இதே காலத்தில் வசூலான ரூ.14.96 லட்சம் கோடியிலிருந்து ரூ.16.69 லட்சம் கோடியை எட்டியது. (ஏப்ரல் 2022 - ஜனவரி 2023). 2023ம் ஆண்டு ஏப்ரலில் 1.87 லட்சம் கோடியாக அதிகபட்ச மாத ஜி.எஸ்..டி வசூல் பதிவு செய்யப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu