அதானிக்காக அரசு வளைத்த விதிகள்: மோடியுடனான உறவு குறித்து ராகுல் காந்தி கேள்வி
மக்களவையில் பேசும் ராகுல்காந்தி
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை பாஜக அரசு மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார். மேலும் மக்களவையில் அதானி பிரச்சினையை எழுப்பினார். தொழிலதிபர் கௌதம் அதானிக்கு பயனளிக்கும் வகையில் விதிகள் வளைக்கப்பட்டுள்ளன என்றார். ராகுல் காந்தியின் தாக்குதலுக்கு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு "காட்டுத்தனமான குற்றச்சாட்டுகளை" கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, தொழிலதிபர் கெளதம் அதானி லாபம் அடைய வேண்டும் என்பதற்காக மோடி அரசு வணிக விதிகளை மாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். தொழிலதிபரின் விமானத்தில் கௌதம் அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் படத்தையும் காங்கிரஸ் தலைவர் காட்டினார்.
"விமான நிலையங்களில் முன் அனுபவம் இல்லாத எவரும் விமான நிலையங்களின் வளர்ச்சியில் ஈடுபட முடியாது என்று ஒரு விதி உள்ளது. இந்த விதி இந்திய அரசால் மாற்றப்பட்டது," என்று காந்தி கூறினார், "இந்த விதி மாற்றப்பட்டது, அதானி குழுமத்துக்கு ஆறு விமான நிலையங்கள் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு இந்தியாவின் மிகவும் லாபகரமான விமான நிலையமான 'மும்பை ஏர்போட்' சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகளைப் பயன்படுத்தி ஜிவிகே நிறுவனத்திடமிருந்து பறிக்கப்பட்டு, இந்திய அரசால் அதானிக்கு வழங்கப்பட்டது."
அதானி எப்படி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனார் என்பது குறித்து பேசிய ராகுல் காந்தி, "2014-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 609-வது இடத்தில் இருந்தார். பிறகு, மந்திரத்தால் அதானி இரண்டாம் இடத்திற்கு உயர்ந்தார்" என்று ராகுல் காந்தி கூறினார்.
ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, "காட்டுத்தனமான குற்றச்சாட்டுகளை" கூற வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு , அவரது கூற்றுகளுக்கு ஆதாரம் கேட்டார்.
அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை காட்டிய ராகுல் காந்தியின் செயலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. குடியரசுத்தலைவர்உரையில் கவனம் செலுத்துமாறு காங்கிரஸ் தலைவரை பிர்லா கேட்டுக் கொண்டார்.
ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளிலும் இடையூறு ஏற்படுத்திய அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினைக்கு மத்தியில் ராகுலின் கருத்து வந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu