AgniPath: முப்படைகளில் 'அக்னி பாதை' திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

AgniPath: முப்படைகளில் அக்னி பாதை திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
X
முப்படைகளில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணிபுரிவதற்கான , ‘அக்னி பாதை’ எனும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்திய ராணுவத்தில் நிரந்தர சேவை மற்றும் குறுகிய கால சேவை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் தற்காலிக ஆட்சேர்ப்புக்கான 'அக்னிபாத்' எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தளபதிகள், ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் அதிக அளவில் இளைஞர்களை சேர்ப்பதற்காக அக்னி பாதை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேரும் வீரர்கள் 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். 4 ஆண்டுகள் பணிபுரியும் இவர்களில் தேவைக்கு ஏற்ப சிலருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும். இதன்மூலம் ராணுவத்தில் புரட்சிகர மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.


அக்னி பாதை திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செலவை குறைக்க திட்டத்தை அரசு தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ரூ. 5,25,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஓய்வூதியத்திற்காக மட்டும் ரூ. 1,19, 696 கோடியும், ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவுக்காக ரூ. 2,33,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், அக்னிபாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இடர்பாடு மற்றும் சிரமபடிகளுடன் மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். அத்துடன் 4 ஆண்டுகள் பணி காலம் முடிவடைந்ததும், சேவா நிதி என்கிற ஒரே தடவையிலான தொகுப்பும், அதற்கான வட்டியும் மொத்தமாக வழங்கப்பட்டுவிடும்.. இவர்களுக்கு ஒய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்டாது.

அதாவது, முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ. 30 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூபாய் 9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ. 21,000 மட்டுமே கையில் வழங்கப்படும். இதேபோல் 2வது ஆண்டில் ரூ. 33,000, 3ம் ஆண்டில் ரூ. 36,500, 4ம் ஆண்டில் ரூ. 40,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை மட்டுமே வழங்கப்படும். பின்னர்4 ஆண்டுகள் நிறைவடைந்ததும், தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ. 5.02 லட்சம் மற்றும் அதற்கு அரசு அளிக்கும் தொகைக்கான வட்டியுடன் சேர்த்து சேவா நிதியாக ரூ. 11. 70 லட்சம் அக்னி வீரர்களுக்கு வழங்கப்படும்.


இந்த சேவா நிதிக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்படாது.

அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள்காப்பீடு ரூ. 48 லட்சத்திற்கு வழங்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் கூடுதலாக ரூ.44 லட்சம் நிதியுதவியும், பணியின்போது காயமடைந்து 100 % மாற்றுத் திறனாளியானால் ரூ.44 லட்சம், 75 சதவீதத்துக்கு ரூ.25 லட்சம், 50 சதவீதத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.


அதேபோல் அவர்கள் தொழில் தொடங்குவதற்கு கடன் வசதிகளும், அடுத்த பணிக்கு செல்வதற்கு ஏதுவாக திறன் சான்று, உயர் கல்வியில் சேருவதற்காக கல்விச் சான்று வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது,

இந்த அக்னி பாதை திட்டத்தின் படி இந்த ஆண்டு மட்டும் 46 ஆயிரம் பேர் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். இவர்களுக்கான வயது வரம்பு 17.5 லிருந்து 21 வயது வரை தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியம். 4 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு நிரந்தர பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!